புத்தகங்களும்,நானும் ( சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்பெசல்)

புத்தகங்களுடனான அந்தச் சிறுவனின் உறவு தினப்பத்திரிக்கையில்தான் துவங்கியது. வீட்டிற்கு தவறாமல் வரும் தினத்தந்தியில் எழுத்துக்கூட்டிப் படிக்கத் துவங்கிய பருவத்தில் கன்னிதீவின் வழியாக அவனது பால்ய கற்பனைகள் தனக்கான பாதைகளைக் கண்டடைந்தது. இப்போது தினத்தந்தியில் கன்னிதீவு மட்டும்தான் வருகிறது. முன்பெல்லாம் இரண்டாம் பக்கத்தில் கன்னித்தீவும், மூன்றாம் பக்கத்தில் மற்றொரு படக்கதையும் வரும். மூன்றாம் பக்கத்தில் வரும் படக்கதை சரியாக 100 வது நாள் அன்று நிறைவடைந்துவிடும்.பின்னர் புதுக்கதை துவங்கும். ஜேம்ஸ்பாண்ட், துப்பறியும் சங்கர்லால் எனப் பலரும் அவனுக்கு நண்பர்களாக அறிமுகமானது தந்தியின் மூன்றாம் பக்கத்தில்தான். அறிமுகமான சில நாட்களுக்குத்தான் மூன்றாம் மனிதர்களாய்,நண்பர்களாய் இருப்பார்கள்,பின் வரும் நாட்களில் நான்தான் ஜேம்ஸ்பாண்ட் என்ற சுய உணர்விற்கு வந்துவிடுவான். ஜேம்ஸ்பாண்ட் உடம்பில் சட்டையில்லாமல் அரைக்கால் டிராயரோடு புதுக்கோட்டையின் தெருக்களில் சாகசம் புரிந்துகொண்டு இருப்பார்.




ஜேம்ஸ்பாண்ட் வளரத்துவங்கிய பருவத்தில் தினத்தந்தியின் அன்றைய கருப்பு வெள்ளை ஞாயிறுமலரில் ரமணி சந்திரனோ, லக்‌ஷ்மியோ அல்லது அனுராதா ரமணனோ கதை எழுதிக்கொண்டு இருப்பார்கள். மெல்ல ஜேம்ஸ்பாண்ட் தனது சாகசங்களைக் குறைத்துக்கொண்டு சமூக விரும்பியாக மாறிவிட்டார். பெண்களின் வேதனைகளும்,கொடுமைகளும் தீர ஒரே தீர்வு ரமணி சந்திரனை அல்லது அனுராதா ரமணனை முதல்வராக்குவதுதான், இதுதான் ஒரே வழி என்று தீர்க்கமாக முடிவெடுத்து இதுகுறித்து தனது தலைவர் கலைஞர் அவர்களுடன் கருத்துரையாடுவது என்ற முடிவிலும் இருந்தார். துரதிஷ்டவசமாக அன்றைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைப் பக்கம் வராமல் இருந்ததால் சந்திக்க இயலாமல் போனது. பின்னர் சந்திக்கும் வாய்ப்பு வந்த காலத்தில் சமூகவிரும்பி நிலையில் இருந்து அரசியல் ஆர்வலர் நிலைக்கு உயர்ந்துவிட்டதால் கருத்துரையாடும் திட்டத்தைக் கைவிட்டார்.



அரசியல் ஆர்வலர் என்ற நிலைக்கு உயர்ந்ததும் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்த கதையாக அவருக்கு தினத்தந்தி பிடிக்காமல் போனது. எல்லாக் கட்சி செய்தியோடும் அவன் கட்சி செய்தியையும் வெளியிடும் தினத்தந்தியைவிட திராவிட இனத்தின் போர்வாளாம் முரசொலிதான் மந்திரமாக மாறிப்போனது. அன்றைய கலைஞருக்கு கட்சிமேல் ராஜீவ் கொலைப்பழி, கோபால்சாமியின் துரோகம், செல்வி.ஜெயலலிதாவின் ஹிட்லர் காலப்பேயாட்டம் இப்படியெல்லாம் நெருக்குதல் இருந்தாலும் இவற்றுக்கும் மத்தியில் தான் படித்த நல்ல இலக்கிய நூல்களை, பெரியார்,அண்ணா எழுதிய இன உணர்வு நூல்களை தன் கொஞ்சு தமிழில் ஒவ்வோரு வாரமும் அறிமுகம் செய்வார். அதைப் படித்ததும் உள்ளூர் நூலகம் சென்று அவற்றை அன்றே படித்து தீர்ப்பது அவனது வாடிக்கையானது. கலைஞரின் அறிமுக நூல்களுக்காக நூலகம் சென்றதில் வேறு நல்ல புத்தகங்களும் கண்ணில்பட அவனது பள்ளி இறுதி மற்றும் கல்லூரிக்கால ஓய்வு நேரம் முழுவதும் நூலகங்களிலேயே சென்றது. சற்றே திரும்பிப் பார்த்தபோது தங்கள் ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வழியில்செலவழித்த அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது.



மேற்படிப்பிற்காக சென்னை வந்த இடத்தில் அவனைப்போலவே ஒரு புத்தக்கிறுக்கன் அறிமுகமானான். அவன்பெயர் நா.முத்துக்குமார். ஒருநாள் முத்துக்குமார் அவனை அழைத்து தன்னுடைய ஓட்டை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து மூச்சுவாங்க டபுள்ஸ் அடித்து அழைத்துச்சென்ற இடம் சென்னையில் வருடம்தோறும் நடக்கும் புத்தகச்சந்தை. அப்போது காகிதேமில்லத் கல்லூரியில்தான் புத்தகச்சந்தை நடந்துவந்தது. இப்போதுபோல அத்தனை பிரம்மாண்டம் இல்லை. ஆனால் அவன் சென்று வந்த நூலகங்களைவிட மிகப்பெரியது. அன்றைக்கு பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கும் அளவிற்கு வசதியில்லாததால் அவன் ஏக்கப் பெருமூச்சின் சூட்டில் அங்கிருந்த புத்தகங்களின் பக்கங்கள் மேலும் மொடமொடப்பானது.



அதிகம் உழைக்க வேண்டும்,மேலும் மேலும் உழைக்க வேண்டும், அதிதீவிரமாக உழைக்க வேண்டும். பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற அவனது ஏக்கக் கனவுதான் அவனது இன்றைய வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது என்பதால் புத்தச்சந்தைமேல் அவனுக்கு இன்றும்,என்றும் நன்றியுணர்ச்சி உண்டு. எல்லாவற்றிற்கும்போல் வாழ்க்கைக்கென்றும் ஒரு வாசம் இருக்கிறதா? புதுபுத்தகங்களை வாசிக்கப் பிரிக்கும் போது அதில் இருந்து கிளம்பும் வாசம்தான் வாழ்க்கையின் வாசம் என்பதை இப்போது உணர முடிகிறது.




நினைத்தேன் எழுதுகிறேன்.




குஜராத்தில் மோடி அரசு கள்ளச் சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்ற புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உலகெங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுத்து வரும் இந்நிலையில் மோடியின் இந்த செய்கை நிச்சயம் விவாதத்திற்குறியதே. அரசின் அனுமதியின் தயாரிக்கப்படும் மது கள்ள சாராயம். அனுமதி இருந்தால் நல்ல சாராயம். கள்ளச் சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்றால் நல்ல சாராயம் காய்ச்சும் அரசுக்கு? நீண்ட நாட்களாக பொதுவாழ்வில் இருப்பவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், மரண தண்டனை தருவதால் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை நிறுத்தவே முடியாது. தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவது பிடிக்கப்பட்டாலோ அல்லது கள்ளச்சாராயத்தால் மரணம் சம்பவித்தாலோ அந்த சர்க்கிளுக்கு உட்பட்ட எஸ்.ஐ சில நாட்கள் சஸ்பென்ட் செய்யப்படுவார். பிறகு துறை ரீதியான விசாரணை அது இதுவென அவர்மீதான குற்றச்சாட்டில் இருந்து வெளியே வந்துவிடுவார். அதற்கு பதிலாக அந்த மாவட்ட எஸ்.பி, அந்த பகுதியின் டி.எஸ்.பி அந்த சர்கிள் ஸ்டேசனில் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர் துவங்கி கடைநிலை காவலர் வரை அத்தனை பேரும் எந்தக் கேள்வி கேட்பாடுமின்றி டிஸ்மிஸ் என அறிவித்தால் நிச்சயம் கள்ளச்சாராயம் ஒழியும்.மாறாக மரண தண்டனை என்று அறிவிப்பதன் மூலம் தூக்கின் வாயிலாக சில உயிர்களையும், சாராயம் வாயிலாக பல உயிர்களையும் பறிக்க மட்டுமே இது உதவும்.

 ________________________________________

இராம.கோபாலன் என்று ஒரு அதி பயங்கர அறிவாளி. முல்லைபெரியாறு அணைப் பிரச்சனையை கேரளாவில் கிருஸ்துவ இயக்கங்கள்தான் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை தடுப்பதற்காக பெரிதாக்குவதாக திருவாய் மலர்திருக்கிறார். தண்ணிப் பிரச்சனை ஏற்கனவே மாநிலப் பிரச்சனையாயிருச்சு. இனி இந்தாள் புண்ணியத்துல மதப்பிரச்சனை வேற! ஏன் சார் கேரளாவெல்லாம் போறீங்க. அங்க யாருக்கும் உங்களைத் தெரியாது. உங்களை நல்லாத் தெரிஞ்ச்ச தமிழ்நாட்டுலயே நீங்க இதை மதப் பிரச்சனையாக்கலாம். எப்படின்னு கேக்குறீங்களா?கிருஸ்துவரான ஜான் பென்னி குயிக் கட்டிய அணையில் தேங்கிவரும் நீரை தமிழக இந்துக்கள் பயன்படுத்தக்கூடாதுனு ஒரே ஒரு அறிக்கை விட்டுப் பாருங்களேன் இராம.கோபாலன் சார்!!

_________________________________________ 

அண்ணன் வடிவேலு சிலகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தற்போது திரு.பிரசாந்த் அவர்களின் பட்த்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர் அரசியல் முகம் காட்டிய நேரத்தில் நண்பர் கேபிள் சங்கரிடம்  பேசும்போது இந்த முடிவு அவருக்கும்,திரை உலகிற்கும் பெரும் இழப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன். அப்பிடின்னா திமுக தோத்துரும்னு முன்னாடியே தெரியுமான்னு கேக்காதிங்க! நான் சொன்ன காரணம் அரசியலுக்கு அடிப்படைத் தேவை நிதானம்.ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கின் மனநிலை. ஆனால் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்ததே நிதானத்தில் அல்ல கோபமான ஒரு மனநிலையில். தனக்கு அரசியல் சரிவரும்!வராது! என்று நிதானித்து முடிவெடுத்து இருந்தால் இந்நிலை வந்திருக்காது. மகாகலைஞன். சத்தியம்.. நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்க்க் குடுத்து வைத்த ஒரு மகா கலைஞன் வடிவேலு. நியாயமாக திரைத்துறை அவரது அரசியலையும், நடிப்பயையும் முடிச்சிட்டு அவரை இத்தனை காலம் ஒதுக்கியிருக்க்க்கூடாது. என்ன செய்வது, உலகில் நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் மிகக் குறைந்த இடம் சினிமாவும்,அரசியலும். அவை இரண்டில் மட்டுமே வடிவேலு அண்ணன் இருந்துவிட்ட்து அந்த நகைச்சுவைக் கலைஞனின் பெரும் சோகம்.



ஸ்பெக்ட்ரம் - தேசம் சேமித்த பலலட்சம் கோடி




ஸ்பெக்ட்ரம்... கடந்த ஓராண்டாக இந்தியர்கள் இறைவனின் திருநாமத்தைவிட அதிகம் உச்சரித்த பெயர். சில பல வணிக விளையாட்டுகள்,சில பல சதிகள், சில பல அரசியல் சடுகுடுகள், அரசிற்கும்,நீதித்துறைக்குமான "தான் யார் என்ற அகங்காரங்கள்" இவற்றோடு மக்களிடையே மண்டையைக் குழப்பவைத்த மீடியாக்கள் என்று ஓராட்டம் ஆடி இப்போது இரண்டாம் சுற்றில் நிற்கிறது. என்னதான் நடந்தது இதில்? எதுதான் உண்மை?

ஸ்பெக்ட்ரம் என்பது அதிர்வெண்.அதாவது மெஹாஹெர்ட்ஸ்னு சொல்றோம் இல்லையா அதுதான். நாட்டில் உள்ள தாதுக்கள்,கனிமங்கள் போல இதுவும் ஒரு வளம். சரி இது எதுக்கு அரசாங்கத்துகிட்ட இருக்கணும்? விசயம் சிம்பிள்.. இதை அரசாங்கம் ஒழுங்கு செய்யாம ஆளுக்காள் ஒரே அலைவரிசையில் செயல்படுத்த ஆரமிச்சா தகவல் தொடர்பில் குழப்பம் வரும். சரி 2ஜி அப்படின்னா என்ன? இதுக்கு முன்னாடி 1ஜி இருந்ததால இது 2ஜி. ஆஹா.. அப்ப 1ஜி அப்படின்னா என்ன? முதன்முதலில் செல்பேசி சேவை அனலாக் முறையில் இயங்கியது. தாத்தா காலத்து டெக்னாலஜி. அதுல நீங்க பேசுனா நான் கேக்கலாம், நான் பேசுனா நீங்க கேக்கலாம்.இதைத்தாண்டி ஒரு வசதியும் கிடையாது. அதுவும்கூட அத்தனை துல்லியமாக சில நேரம் இருக்காது.

அடுத்து வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதுதான் 2ஜி. இது gsm மற்றும் cட்ம அப்படின்னு ரெண்டு வழில இயங்குது.  இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் வேலை செய்யும். ஒவ்வோரு நாட்டுலயும் வேறவேற‌ அதிர்வெண்ல‌ இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.

1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குறதுன்னா என்ன? இந்த‌ அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள்.  செல்பேசிச் சேவைக்கு அதை நடத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம்.இது இவர்கள் தங்கள் செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது அப்லிங் மற்றும் டவுன்லிங். இதுக்காக தகவல் தொடர்பு அமைச்சகம் 75 மெகாஹெர்ட்ஸ் அப்லிங்கிற்கும் 75 மெஹா ஹெர்ட்ஸ் டவுன்லிங்கிற்கும் தருகிறது. அதாவது மொத்தம் 150 மெஹா ஹர்ட்ஸ். இந்த 150 மெஹா ஹர்ட்ஸ்குள்ள அமைச்சகம் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரக்கூடாது என்பது சட்டம். ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும். 900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.

சரியா! இப்போ இருக்குற மெகாஹர்ட்ஸைத் தாண்டி அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அரசு என்ன செய்யும்? சிம்பிள் ஏலம்விடும். ஏன் ஏலம் விடணும்? அப்பதான் யார் அதிகம் கேக்குறாங்களோ அவங்களுக்கு குடுக்கலாம். அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும். ஆ.ராசா என்ன செஞ்சாரு? ஏலம் விடாம அமைச்சகமே ஒருவிலையை நிர்ணயித்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கினார். இதுனால என்னாச்சு? என்னாச்சா... எவ்வளவு பெரிய துரோகம் இது!! ஏலம் விட்டுருந்தா 1,76,000 கோடிக்கு போயிருக்கும். ஆனா இந்தாளு முன்னுரிமையில் குடுத்தால வெறும் 30,984.55 கோடிதான் அரசுக்கு வந்துச்சு. எவ்வளவு பெரிய பச்சை துரோகம் இந்தாள் செஞ்சது!! இல்லையா? இப்படித்தான் படிச்சதும் தோணும். கொஞ்சம் அதன் மறுபுறத்தையும் பார்ப்போமா?

ஏன் ராஜா இப்படிச் செஞ்சாரு? முதன்முதலில் 1997 இல் சென்னையில் ஸ்கைசெல் நிறுவனத்தின் செல்பேசி உபயோகித்தவர்களுக்குத் தெரியும். அவுட் கோயிங் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய், இன்கம்மிங் 15 ரூபாய். 20 ரூபாய் என்பது அன்று ஒரு தினக் கூலிக்காரரின் ஒருநாள் சம்பளம்.  ஏன் அவ்வளவு விலை?? காரணம் அன்று அலைக்கற்றை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ததால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மிக அதிகவிலை குடுத்து அந்த உரிமையை வாங்கியது, வாங்கிய தொகையை யார் தலையில் கட்டும்? பயனாளர் தலையில் கட்டும். அதனால்தான் அந்த ரேட்.

அன்று ஒரு தினக்கூலிக்காரரின் ஒருநாள் சம்பளத்தொகையை ஒரே ஒரு அழைப்பிற்காக செலவு செய்த நிலைபோய் இன்று ஒரு தினக்கூலிக்காரர் தான் எங்கே வேலைக்கு வரவேன்டும் என்பதை தன்னுடைய செல்பேசியில் கேட்டு தெரிந்துகொண்டு வரும் நிலைக்கு மலிவாகிவிட்டது தகவல்தொடர்பு. எப்படி? காரணம் அதே ஆ.ராசா. ஏலமுறையில் விலை ஏற்றிக் குடுக்காமல் நிர்ணய விலையில் அலைக்கற்றைகளை வழங்கியதால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் அதிக விலை வைக்காமல் 50 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் அழைப்பினை நிறுவனங்கள் வழங்குகிறது.

சரி சார், குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்?  ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.

நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது. நாளை நீங்கள் என்னைப் பார்க்க வடபழனியில் இருந்து என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்து பார்த்த பின்னர் வீட்டில் என் மனைவி சொல்லித்தான் நான் இல்லை என்பதே உங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வர 15 கிலோமீட்டர் போக 15 கிலோமீட்டர் என 30 கிமீக்கு குறைந்தது அரைலிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கும். குறைந்தது 33 ரூபாய் உங்களுக்கு இழப்பு. உங்களுக்கு என்றால் உங்களுடைய இழப்பு அல்ல, எரிபொருள் என்ற அளவில் இது தேசத்தின் இழப்பு. இந்த 33 ரூபாயில் வரிக்கு முந்தைய அடக்கவிலையான குறைந்தது 15 ரூபாய் அன்னிய செலாவனியாக அரபு நாடுகளுக்குப் போய்விடும். நம் இருவரைப்போல நாட்டில் எத்தனை கோடி பேர்? எத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் மிச்சம்? இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல பல உதாரணங்களை தகவல் தொடர்பு மலிவினால் தேசத்திற்கு கிடைத்த சேமிப்பை என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் கணக்கிட முடியாத லட்சம்கோடியை இந்த தேசத்திற்கு சேமித்துள்ளார். காமாலைக்கரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். பலருக்கும் அவர் ஏற்படுத்திய இழப்பு தெரிகிறது, எனக்கு அதனால் விளைந்த சேமிப்பு தெரிகிறது. ஒரு அமைச்சராக குப்பனையும்,சுப்பனையும் செல்பேச வைத்ததோடு  இந்த தேசத்திற்கும் பலபலபல இலட்சம் கோடிகளை சேமித்துத்தந்த அமைச்சர் ஆ.ராசாவிற்கு என் வந்தனங்கள்.

யுடான்ஸ் நட்சத்திரம்





ஒரு சிறு இடைவெளி.. அதிகம் இல்லை ஜென்டில்மேன் ஜஸ்ட் ஒரு வருஷம்தான் ஆகுது கடைசியா இடுகையிட்டு. வலைப்பூக்களில் தீவிரமாக இயங்கிய காலத்திலேயே தொடர்ச்சியாக இடைவெளியின்றி எழுதியவனல்ல. இருப்பினும் எழுதாமலேயே இருந்தவனும் அல்ல. ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் ஒன்றும் எழுதவுமில்லை, தோனவுமில்லை. இந்த விசயத்தில் நான் மட்டுமல்ல என் போல பலரையும் கெடுத்தது கூகிள் பஸ். அரசியல் சார்ந்தவன், பெரும் பொறுப்பில் இருப்பவன் இப்படியெல்லாம் இருந்தாலும் எந்த இமேஜ் கவலைகளுமின்றி பின்னூட்டப் பெட்டிகளில் கும்மி அடிக்க ஒருபோதும் கவலைகொண்டதில்லை.பலரும் உலகம் முழுவதிலிருந்தும் பார்க்கும் பொதுவெளியிலேயே இப்படியென்றால் சில நூறு பேர்களுக்குள் இயங்கும் கூகிள் பஸ்சில்.. அதுவும் ஒத்த அலைவரிசை நண்பர்கள் மட்டும் கூடும் கூகுள் பஸ்சில்.. கேட்கவா வேண்டும்?!?!?  ஆசைதீர ஆடித்தீர்த்தோம். வலைப்பூக்கள் பக்கம் வர எண்ணமேயின்றி முழுநேரமும் அங்கேயே பொழுதைத் தொலைத்தோம். இப்பொதும் இங்கே மீண்டு(ம்) வரக் காரணம் வெகு விரைவில் எங்கள் தொல்லை தாங்காமல் பஸ்சை கூகிள் மூடுவதுதான்.இனி நான் மட்டுமல்ல.நண்பர்கள் குசும்பன்,வித்யா,கேவியார்,விஜியக்கா,வெண்பூ எனப் பலரையும் இனி இங்கே முன்போல் தொடர்ச்சியாகக் காணலாம்.



சாதாரணமாக நான் ஒரு இடுகையிட்டால் சுமார் ஆயிரத்திற்கும் மேல் ஹிட்ஸ்களும் 50 க்கும் மேல் பின்னூட்டமும் வரும். ஆனால் இந்த இடைவெளியில் இது மீண்டும் சாத்தியமா என்று தெரியவில்லை. வலைப்பூ நண்பர்கள் பலரையும் விட்டு விலகிவிட்டது இப்போதுதான் சிறு வருத்தத்தோடு உணரமுடிகிறது. எனது இரண்டாம் இன்னிங்சை யுடான்ஸ் திரட்டியின் நட்சத்திரமாக்கி மீண்டும் துவக்கி வைத்த நண்பர் கேபிள் சங்கருக்கு என் அன்பு. மீண்டும் இன்றே சந்திப்போம்.

இனமானப் பேராசான் வாழ்கவே

















அன்னைத் தமிழுக்கு
மாணவன்
அருமைத் தம்பியர்க்கு
பேராசான்.

அவர்..
கற்பூரக் கனல்
பேச்சால்
கழகம் வளர்ந்தது.
கரைபடா கரத்தின்
உழைப்பால்
கல்வித்துறை
சிறந்தது.

இனத்திற்காய் எழுதும்
எனக்கே எழுதுகிறார்
பேராசிரியர் என்றார்
கலைஞர்.

தேடித் தேடிப் படிப்பதில்
தெளிவாய் சிந்திப்பதில்
தீர்க்கமாய் உழைப்பதில்
பேராசான் கலைஞருக்கே
முன்னுதாரணம்
என்பதை எவரும் அறியார்.
அதைப்
பெருமைப்படுத்திக்கொள்ள
இவரும் தெரியார்.

இனமானம் அவர்
பேச்சு
சுயமரியாதை அவர்
மூச்சு.

அகவை 89 இல்
அடிவைக்கும் ஆசானே
இனம்வாழ
மொழிவாழ
இன்னும் 100 ஆண்டுகள்
இரும்.

பேராசிரியப் பெருந்தகை
வாழிய!வாழிய!வாழியவே!

தனியார் பள்ளிகள் தனி அரசா??


வாழ்வில் எத்தனையோ தருணங்கள் நம்மிடையே வந்துபோகும்.அதில் நாம் பள்ளிக்குச் செல்லும் முதல்நாளும்,நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முதல்நாளும் என்றுமே சம்திங் ஸ்பெசல்.அழுதுகொண்டே செல்லும் நம்மை அரவணைத்து அமரவைத்து இன்னோரு தாயாக,தந்தையாக ஆசிரியர்களை நாம் ஏற்றுக்கொள்ளும் ரசாயன மாற்றம் எந்த சோதனைச்சாலையிலும் கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளும்,அரசு உதவி பெறும் தனியார் நிர்வாகப் பள்ளிகளும் மட்டுமே இருந்தது.கல்வி இலவசமாக இருந்ததால் அதைத் தரும் ஆசிரியர்கள் மீது அளவுகடந்த மரியாதை மாணவர்களுக்கும் இருந்தது,பெற்றோர்களுக்கும் இருந்தது. அண்ணன் வெட்டிகாடு இரவிச்சந்திரனின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி என்ற இந்த தொடரைப் படியுங்கள்.பள்ளிக்கும்,மாணவனுக்கும் இருந்த அந்த உறவை வெகு அழகாக சொல்லி வருகின்றார்.ஆனால் இன்றைய நிலையில் தனியார் பள்ளிகள் பெருகிவிட்ட சூழலில் இந்த நிலை பெரிதும் மாறியிருப்பது உண்மை.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்களிடம் பெற்றோர்கள் ஒரு மாபெரும் எதிர்காலத்தை ஒப்படைப்படைக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.வருகின்ற மாணவர்களை எதிர்கால சமூகமாக நினைக்கும் மனநிலைமாறி நிகழ்கால காசாகவே பார்க்கும் நிலை இருப்பது உண்மை.மாணவர்களும் மாதா,பிதாவுக்குப் பின்னர் ஆசிரியரை வைத்த நிலைமாறி நாம் குடுக்கும் காசுக்கு நமக்கு வேலை செய்யும் வேலைக்காரன் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது உண்மை.தனியார் பள்ளிகளின் பணவெறி எந்த அளவிற்கு உட்சத்தில் உள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

அடுத்த கல்வியாண்டின் சேர்க்கைக்காக தற்போதே பெரும்பாலான ஆங்கிலப்பள்ளிகள் சேர்க்கையைத் துவங்கிவிட்டனர்.ஒரு மாணவன் முதல் வகுப்பில் சேர வேண்டும் என்றால் 5 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.அதற்கு அரசு எந்த தேதிக்குள் பிறந்து இருக்க வேண்டும் என்று தேதி நிர்ணயம் செய்துள்ளது.மாநில அரசின்கீழ் வரும் பள்ளிகளில்(ஸ்டேட் போர்ட்,மெட்ரிக்,ஆங்கிலோ இந்தியன்) சேர வேண்டும் எனில் ஜூலை 31 ம் தேதிக்குள்ளும்,மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிகளில் ஆகஸ்ட்டு 31 ஆம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். அதாவது வரும் 2011 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் ஒரு மாணவன் சேர வேண்டுமெனில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 31 க்குள்ளும், ஆகஸ்ட்டு 31 க்குள்ளும் பிறந்திருந்தால் போதும்.அதுமட்டுமின்றி மேற்குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மாதம் பின்னர் பிறந்திருந்தால் டி.இ.ஓவிடம் விலக்கு பெற்று அந்த மாணவனையும் முதல் ஆண்டில் சேர்க்கலாம்.இதுதான் அரசு சொல்லும்விதி.

ஆனால் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளும்  அரசு சொல்லும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் 31க்குள் பிறந்திருக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தங்கள் விண்ணப்பங்களிலேயே தெரிவிக்கின்றனர்.அதாவது இவர்கள் கூற்றுப்படி 2011 ஆம் ஆண்டில் முதல் வகுப்பு சேர 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் பிறந்திருக்க வேண்டும்.இதன் பிண்ணனி என்னவென்று புரிகிறதா?? 

சாதாரணமாக 2 ஆம் வகுப்பு படிக்கும் அளவிற்கு வயதும்,மூளை வளர்ச்சியும்  உடைய மாணவனுக்கு ஒன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தினால் அவனால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். நீண்ட நாள் திட்டத்தில் பொதுத்தேர்வில் அவனால் பள்ளி செண்டம் ரிசல்ட் வாங்கும்.வாங்கி?? மேலும் மேலும் பீஸை உயர்த்தலாம்.தட்ஸ் ஆல்.

ஆனால் இவர்களின் பணவெறியால் ஒரு மாணவன் இழப்பது தன் வாழ்வில் மீண்டும் பெற முடியாத பொன்னான ஒரு வருடம்.கூடவே வேலை,திருமணம் போன்றவை இதனால் ஒரு வருடம் தள்ளிப்போகும் என்பதும் கொடுமை.அரசுபள்ளிகள் இன்றும் அரசின்விதிப்படி ஜூலை 31க்குள் பிறந்தவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கின்றது.ஆனால் தனியார் பள்ளிகள் பகிரங்கமாகவே தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதை மீறுகின்றனர்.எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இந்த தைரியம்??? தனியார் பள்ளிகள் என்ன தனி அரசா???


தம்பியின் டைரிக் குறிப்புகள் (03/12/10)


கிட்டத்தட்ட 27 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளதாக இரு அரசுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு நகருக்கும் பின்னர் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும் கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.ஆங்கிலேயர் காலத்தில் தலைமன்னாருக்கு சென்னையில் இருந்தே டிக்கெட் எடுக்கலாம்.அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி(ராமேஸ்வரம்) வரை ரயிலில் சென்று பின்னர் அங்கிருந்து கப்பலில் தலைமன்னாருக்கு செல்வது. இதில் கப்பலில் பயணிக்கும் கட்டணமும் ரயில்டிக்கெட்டிலேயே அடங்கிவிடும்.இன்றும் புதுக்கோட்டையில் சில பெருசுகள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ”போட் மெயில்” என்று அழைப்பதைப் பார்க்கலாம். கப்பல் போக்குவரத்துபோல கச்சத்தீவின் மீதான உரிமையையும் மத்திய அரசு மீட்டுத்தந்தால் கோடி புண்ணியம்.இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் நடுவில் இருவருக்கும் பொதுவாக இருந்த கச்சத்தீவு இன்று இலங்கைக்கு உரிமையாகிவிட்டது.இன்று எந்த இந்தியரும் விசா இல்லாமல் பிரவேசிக்க முடியாது.என்னுடைய தாய்மாமாவும் அவரது குடும்பத்தினரும் இலங்கையில் வசித்து வந்தனர். தன் தங்கையை பார்க்க விரும்பிய மாமா ஒரு தேதியைக் குறிப்பிட்டு “நீ அன்று கச்சத்தீவு வந்துவிடு.நாங்களும் அங்கே வந்து விடுகின்றோம்” என்று ஒரு கடிதம் போட்டு இருந்தார்.6 வயது சிறுவனான என்னையையும்,பாட்டியையையும் அழைத்துக்கொண்டு அம்மா கச்சத்தீவு சென்றார்.ஏதோ திருவிழா அப்போது அங்கு நடந்து கொண்டிருந்ததுபோல மங்கலாக நினைவில் உள்ளது.மாமா குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு அன்றே திரும்பினோம். ஒரு கடிதம்...ஒத்தக் கடிதம்... அது கிடைத்திருக்கும்,தங்கை வருவாள் என்று நம்பி மாமா வந்து காத்திருந்தார். அதே கடிதத்தை நம்பி இடையில் வேறுகாரணங்களினால் அண்ணன் பயணத்தை ரத்து செய்ய மாட்டார் என்ற உறுதியுடன் என் அம்மாவும் சென்றார். நேற்று மாலை 7 மணிக்கு நானும் கேபிள் சங்கரும் நேரில் சந்திப்பதாக செல்ஃபோனில் பேசிக்கொண்டோம். அநேகமாக நாளை மாலைக்குள் சந்தித்துவிடுவோம்.



---------------------------------------------------------------------



அமெரிக்க ஃபுளோரிடாவில் உள்ள எதோ ஒரு பல்கலைக்கழகம் தே.மு.தி.க இயக்கத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்குகின்றது.முதலில் அவருக்கு எனது வாழ்த்துகள்.பொதுவாக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று. எனக்குத் தெரிந்து அதை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு.துணை-முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.திருச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது ஒரு நிர்வாகி வரவேற்பு விளம்பரத்தில் டாக்டர்.ஸ்டாலின் என்று அடித்து இருந்தார்.அவரை அழைத்து அவ்வாறு அடிப்பது தவறு என்று அறிவுரை வழங்கியதை நேரில் கண்டிருக்கிறேன்.திரு.விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்??பார்ப்போம்.



---------------------------------------------------------------------



நந்தலாலா படத்தைப் பற்றி பல விமர்சனங்கள்.ஏதோ ஒரு ஜப்பான் படத்தின் காப்பி என்று அண்ணன் பைத்தியக்காரன்கூட கூகுள்பஸ்சில் எழுதி இருந்தார்.எனக்கு உலகப்படம் தெரியாது.ஏன் உள்ளூர் இந்தி படம்கூட நான் பார்ப்பதில்லை.நான் பார்த்த தமிழ் படங்களில் இது ஒரு சிறந்த படம்.அவ்வளவுதான் என் விமர்சனம்.



---------------------------------------------------------------------



உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் 5 இடங்களில் வன்னியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று பா.ம.கவின் தலைவர். மருத்துவர்.திரு.இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்நாடு மக்கள் தொகையில் 50 சதவிகிதம் வன்னியர்கள் இருப்பதால் இந்தக் கோரிக்கை. ஏங்கய்யா தமிழ்நாட்டைப் பாக்குறீங்க? உங்க வீட்டுக்குள்ள பாருங்க 100% வன்னியர்தான். அப்புறம் ஏன் அல்பத்தனமா 5 பணியிடத்துக்கு மட்டும் கேக்குறீங்க?? 9 பணியிடத்துக்கும் சேர்த்து கேளுங்க. யாருகிட்ட கேக்குறீங்க?? அண்ணங்கிட்டதான கேக்குறீங்க?? சும்ம்ம்மா கூச்சப்படாம கேளுங்க.



---------------------------------------------------------------------



தினத்தந்தி வெளியிட்டுள்ள ”வரலாற்றுச் சுவடுகள்” புத்தகம் தொடராக வந்த காலத்திலேயே விடாமல் படித்தேன்.இப்போழுது புத்தக வடிவிலும் சிறப்பாகவே உள்ளது.நமக்கு நினைவு தெரிந்த பின்னர் நடந்து நிகழ்வுகளினூடே பயணித்து சமகால வரலாற்றில் வந்து நிற்கும்போது சிறு பிராயத்தில் இருந்து படிப்பாடியாக நாம் வளர்ந்து இன்றைய வயதில் நிற்கும் உணர்வு அதைப் படிக்கும்போது கிடைகின்றது.worth buying



---------------------------------------------------------------------

பிடித்த கவிதை


நம்பிக்கை


கல்லில்

சிரிப்பைச் செதுக்கி

பூவைப் பிடுங்கி

அடித்தேன் கல்லில்

‘பூஜை’என்று

கும்பிட்டது

கும்பல்.



ஏதோ சிரிப்பு

எங்கிருந்து?

உள்ளிருந்தா?

வெளியிருந்தா?



செத்து செத்து

உபதேசிக்கிறது

பூவின் சிரிப்பு.



கேட்டேன்

பூவைக்

கும்பிட்டேன்.



ஊரைப் பார்த்து

‘கல்லின் சிரிப்பு

முறைப்பு’ என்றேன்.



கேட்ட கும்பல்

கல்லைப் பிடுங்கி

பூவையடித்தது.





-- பிரமிள்


டிஸ்கி : அர்த்தம் புரியலைன்னா இரண்டாம் முறை படிக்காதிங்க.அர்த்தம் புருஞ்சா நம்ம மேலேயே நமக்கு அசிங்கமா வரும்.


----------------------------------------------------------------------

அறிஞரின் தத்துவம்



கண்ணா நீ டி.எம்.கேவுக்கு ஓட்டு போட்டாலும் சரி, ஏடிஎம்கேவுக்கு ஓட்டுபோட்டாலும் சரி, ஓட்டிங் மிஷன்லதான் போடணும்.