கிட்டத்தட்ட 27 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளதாக இரு அரசுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு நகருக்கும் பின்னர் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும் கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.ஆங்கிலேயர் காலத்தில் தலைமன்னாருக்கு சென்னையில் இருந்தே டிக்கெட் எடுக்கலாம்.அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி(ராமேஸ்வரம்) வரை ரயிலில் சென்று பின்னர் அங்கிருந்து கப்பலில் தலைமன்னாருக்கு செல்வது. இதில் கப்பலில் பயணிக்கும் கட்டணமும் ரயில்டிக்கெட்டிலேயே அடங்கிவிடும்.இன்றும் புதுக்கோட்டையில் சில பெருசுகள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ”போட் மெயில்” என்று அழைப்பதைப் பார்க்கலாம். கப்பல் போக்குவரத்துபோல கச்சத்தீவின் மீதான உரிமையையும் மத்திய அரசு மீட்டுத்தந்தால் கோடி புண்ணியம்.இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் நடுவில் இருவருக்கும் பொதுவாக இருந்த கச்சத்தீவு இன்று இலங்கைக்கு உரிமையாகிவிட்டது.இன்று எந்த இந்தியரும் விசா இல்லாமல் பிரவேசிக்க முடியாது.என்னுடைய தாய்மாமாவும் அவரது குடும்பத்தினரும் இலங்கையில் வசித்து வந்தனர். தன் தங்கையை பார்க்க விரும்பிய மாமா ஒரு தேதியைக் குறிப்பிட்டு “நீ அன்று கச்சத்தீவு வந்துவிடு.நாங்களும் அங்கே வந்து விடுகின்றோம்” என்று ஒரு கடிதம் போட்டு இருந்தார்.6 வயது சிறுவனான என்னையையும்,பாட்டியையையும் அழைத்துக்கொண்டு அம்மா கச்சத்தீவு சென்றார்.ஏதோ திருவிழா அப்போது அங்கு நடந்து கொண்டிருந்ததுபோல மங்கலாக நினைவில் உள்ளது.மாமா குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு அன்றே திரும்பினோம். ஒரு கடிதம்...ஒத்தக் கடிதம்... அது கிடைத்திருக்கும்,தங்கை வருவாள் என்று நம்பி மாமா வந்து காத்திருந்தார். அதே கடிதத்தை நம்பி இடையில் வேறுகாரணங்களினால் அண்ணன் பயணத்தை ரத்து செய்ய மாட்டார் என்ற உறுதியுடன் என் அம்மாவும் சென்றார். நேற்று மாலை 7 மணிக்கு நானும் கேபிள் சங்கரும் நேரில் சந்திப்பதாக செல்ஃபோனில் பேசிக்கொண்டோம். அநேகமாக நாளை மாலைக்குள் சந்தித்துவிடுவோம்.
---------------------------------------------------------------------
அமெரிக்க ஃபுளோரிடாவில் உள்ள எதோ ஒரு பல்கலைக்கழகம் தே.மு.தி.க இயக்கத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மதிப்புறு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்குகின்றது.முதலில் அவருக்கு எனது வாழ்த்துகள்.பொதுவாக மதிப்புறு முனைவர் பட்டம் பெறுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற அடைமொழியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பது அதன் விதிகளுள் ஒன்று. எனக்குத் தெரிந்து அதை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு.துணை-முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.திருச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது ஒரு நிர்வாகி வரவேற்பு விளம்பரத்தில் டாக்டர்.ஸ்டாலின் என்று அடித்து இருந்தார்.அவரை அழைத்து அவ்வாறு அடிப்பது தவறு என்று அறிவுரை வழங்கியதை நேரில் கண்டிருக்கிறேன்.திரு.விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்??பார்ப்போம்.
---------------------------------------------------------------------
நந்தலாலா படத்தைப் பற்றி பல விமர்சனங்கள்.ஏதோ ஒரு ஜப்பான் படத்தின் காப்பி என்று அண்ணன் பைத்தியக்காரன்கூட கூகுள்பஸ்சில் எழுதி இருந்தார்.எனக்கு உலகப்படம் தெரியாது.ஏன் உள்ளூர் இந்தி படம்கூட நான் பார்ப்பதில்லை.நான் பார்த்த தமிழ் படங்களில் இது ஒரு சிறந்த படம்.அவ்வளவுதான் என் விமர்சனம்.
---------------------------------------------------------------------
உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் 5 இடங்களில் வன்னியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று பா.ம.கவின் தலைவர். மருத்துவர்.திரு.இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது தமிழ்நாடு மக்கள் தொகையில் 50 சதவிகிதம் வன்னியர்கள் இருப்பதால் இந்தக் கோரிக்கை. ஏங்கய்யா தமிழ்நாட்டைப் பாக்குறீங்க? உங்க வீட்டுக்குள்ள பாருங்க 100% வன்னியர்தான். அப்புறம் ஏன் அல்பத்தனமா 5 பணியிடத்துக்கு மட்டும் கேக்குறீங்க?? 9 பணியிடத்துக்கும் சேர்த்து கேளுங்க. யாருகிட்ட கேக்குறீங்க?? அண்ணங்கிட்டதான கேக்குறீங்க?? சும்ம்ம்மா கூச்சப்படாம கேளுங்க.
---------------------------------------------------------------------
தினத்தந்தி வெளியிட்டுள்ள ”வரலாற்றுச் சுவடுகள்” புத்தகம் தொடராக வந்த காலத்திலேயே விடாமல் படித்தேன்.இப்போழுது புத்தக வடிவிலும் சிறப்பாகவே உள்ளது.நமக்கு நினைவு தெரிந்த பின்னர் நடந்து நிகழ்வுகளினூடே பயணித்து சமகால வரலாற்றில் வந்து நிற்கும்போது சிறு பிராயத்தில் இருந்து படிப்பாடியாக நாம் வளர்ந்து இன்றைய வயதில் நிற்கும் உணர்வு அதைப் படிக்கும்போது கிடைகின்றது.worth buying
---------------------------------------------------------------------
பிடித்த கவிதை
நம்பிக்கை
கல்லில்
சிரிப்பைச் செதுக்கி
பூவைப் பிடுங்கி
அடித்தேன் கல்லில்
‘பூஜை’என்று
கும்பிட்டது
கும்பல்.
ஏதோ சிரிப்பு
எங்கிருந்து?
உள்ளிருந்தா?
வெளியிருந்தா?
செத்து செத்து
உபதேசிக்கிறது
பூவின் சிரிப்பு.
கேட்டேன்
பூவைக்
கும்பிட்டேன்.
ஊரைப் பார்த்து
‘கல்லின் சிரிப்பு
முறைப்பு’ என்றேன்.
கேட்ட கும்பல்
கல்லைப் பிடுங்கி
பூவையடித்தது.
-- பிரமிள்
டிஸ்கி : அர்த்தம் புரியலைன்னா இரண்டாம் முறை படிக்காதிங்க.அர்த்தம் புருஞ்சா நம்ம மேலேயே நமக்கு அசிங்கமா வரும்.
----------------------------------------------------------------------
அறிஞரின் தத்துவம்
கண்ணா நீ டி.எம்.கேவுக்கு ஓட்டு போட்டாலும் சரி, ஏடிஎம்கேவுக்கு ஓட்டுபோட்டாலும் சரி, ஓட்டிங் மிஷன்லதான் போடணும்.