அனுஜன்யா
09:28
பதிவுலகுடனான பரிட்சையம் துவங்கி விளையாட்டுப்போல நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது.கவுண்டர் ஒரு படத்தில் நடந்து,பின்னர் சைக்கிள்,பின்னர் காரில் வந்து என பிச்சை எடுப்பாரே! அதுபோல முதலில் பதிவுகளைப் படித்து,பின்னர் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு,அப்புறம் பதிவெழுதத் துவங்கியென ஒரு மாதிரி பதிவராக செட்டிலானேன்.
2008 ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் அதிகம் எழுதியதும் அந்த ஆண்டில்தான்.ஆண்டு.பதிவர்கள் பலரும் எனக்கு நேரில் அறிமுகமானதும் அந்த ஆண்டில்தான்.எனது பிளாக்கின் ஹிட் கவுண்டர் உச்சத்தைத் தொட்டதும் அந்த ஆண்டில்தான்.அப்துல்லா என்று ஒரு பதிவர் இருக்கின்றான் என பிறருக்குத் தெரியத் துவங்கியதும் அந்த ஆண்டில்தான்.
விடாமல் எழுதிவந்த எனக்கு இடையில் ஒரு சலிப்பு.காரணமற்ற சலிப்பு.எனக்கென்று இல்லை,பதிவர்கள் பலருக்கும் இந்த சிண்ட்ரோம் நிச்சயம் வரத்தான் செய்யும். லக்கிலுக்,உண்மைத் தமிழன் போல எழுத்தாளர்களாய் இருப்பவர்களுக்கு அதாவது எழுத்தை ஒரு passion நினைக்கும் சிலருக்கு மட்டும் இது விதிவிலக்கு.சிறிது சிறிதாக எழுதுவது குறைந்து இப்போது வேலைப் பளுவும் அதிகரிக்க சுத்தமாகவே எழுதுவதில்லை என்றாகிவிட்டது. அதேபோல இன்னோரு விஷயம் பின்னூட்டம். நான் பொதுவாக பின்னூட்டங்களுக்குத் தனித் தனியாக பதில் சொல்வதில்லை,மொத்தமாகத்தான் சொல்வேன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதை என்னிடம் கடுமையாக எதிர்த்த ஒரு புது பதிவர் “நம்மைத் தேடி பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனித்தனியாக பதி சொல்வதுதான் முறை,மரியாதை என்று கடுமையாக கோபித்துக்கொண்டார். அவர் இப்போதெல்லாம் இடுகை இடுவதோடு சரி.பின்னூட்டங்களுக்கு பதிலே சொல்வதில்லை. எதுவுமே ஆரம்பத்தில் அதிகம் ஈர்க்கும்,எனவே அதற்கு அதிகம் நேரமும் ஒதுக்குவோம்.பின்னர் ஈடுபாடு குறையும்போது நாம் அதற்கு ஒதுக்கும் நேரம் குறையும்.எல்லாமே குறைந்துவிடும்.இது பொதுவான விஷயம்.
ஆனால் ஈடுபாடு குறையாமல் ஒருவன் பதிவுலகில் இருந்து விலகியே இருப்பது என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.அப்படி ஒருவர் இருக்கின்றார்... அண்ணன் அனுஜன்யா. பதிவுலகில் கிட்டத்தட்ட அனைவரும் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள்.என்னை டேய் எப்படி இருக்க? என்று உரிமையோடு அழைக்கும் ஓரிருவரில் அண்ணன் அனுஜன்யாவும் ஒருவர்.இத்தனைக்கும் நான் அவரை நேரில் சந்தித்தது ஒருமுறை..ஒரே ஒரு முறை.பேசியது சிலமுறை..வெகு சிலமுறை.அவரை முதல் முறைச் சந்திக்க முடிவானபோது பணி நிமித்தம் சேலத்தில் இருந்தேன்.கிளம்ப சற்று தாமதமாகிவிட்டது. இருப்பினும் இடையில் ஓய்வெடுக்காது தொடர்ந்து வண்டி ஓட்டி 6 மணி நேரத்தில் சென்னைக்கு வந்த என்னை கடுமையாக் கடிந்து கொண்டது இன்றும் நினைவில் இருக்கின்றது. அவர் கவிதை எழுதி பதிவில் போட்டால் போட்டிக்கு நானும் ஒரு கவிதை எழுதி எனது பதிவில் போடுவேன். நான் எழுதிய பெரும்பாலான கவிதைகள் அவருக்குப் போட்டியாக எழுத முயற்சித்ததில் வந்ததுதான். ஒருமுறை ஒரு கவிதை எழுதி என்ன தலைப்பு வைப்பது என்று தெரியாமல் “அனுஜன்யா என்றே தலைப்பு வைத்தேன்.நான் இப்போது அதிகம் எழுதாமல் போனதற்கு அவர் இல்லாததும் ஒரு காரணம்.
அண்ணே, நீங்க எழுதாம இருக்குறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.ஆனால் ஈடுபாடு குறைவோ அல்லது சிந்தனை வறட்சியோ நிச்சயம் காரணமாக இருக்க முடியாது.இரண்டு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு தொடர்ந்து எழுதணும்னு எண்ணம் வந்திருக்கு.வாங்க ரெண்டு பேரும் முந்திமாதிரி ஆட்டத்தை ஆரமிப்போம்.