தினத்தந்தியும் தலையங்கமும்


நாளிதழ்களுடனான எனது நினைவு தினத்தந்தியுடனேதான் துவங்குகின்றது.காலையில் வீட்டிற்கு வரும் தினத்தந்திக்கான எனது காத்திருப்பு 28 வருடங்களாக இன்றும் தொடருகின்றது. கன்னித்தீவு ஏற்படுத்திய ஆர்வம்தான் இந்த நொடிவரை எனது வாசிப்பிற்கும்,கற்பனைக்குமான வித்தாக இருக்கிறது. வட இந்திய நடிகைகள் மட்டுமல்ல வடக்குபட்டி கோயிந்தசாமிக்குக்கூட தமிழை அறிமுகம் செய்வது இன்றும் தினத்தந்திதான்.

தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்து டீக்கடை மனிதனுக்கு எளிய முறையில் மொழி,அரசியல் மற்றும் உலக நடப்புகள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் பணியோடு அவன் பஜ்ஜியில் இருக்கும் எண்ணெயை உறுஞ்சி ஆரோக்யம் காக்கும் அரும்பணியும் தினத்தந்தியே செய்கின்றது.

உலகில் எந்த ஒரு சிக்கலான விஷயமும் மொழி ஆளுமை கைகூடும்பட்சத்தில் சொல்வதற்கும்,புரிதலை ஏற்படுத்துவதற்கும் மிகவும் எளிதாகிவிடும்.அரை நூற்றாண்டு கடந்து இன்னமும் அதன் ஆசிரியர் குழுவினருக்கு அதில் வரட்சியே இல்லை என்பது பெரும் ஆச்சர்யம்.சக மனிதன் ஒருவன் திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்து வெத்தலை,பாக்கு போட்டுக்கொண்டு நம்மோடு அரட்டை அடிக்கும் தொணி தினத்தந்தி நமக்குள் ஏற்படுத்தும் ஒரு சுகானுபவம்.



சமீப நாட்களாக தினத்தந்தியில் தலையங்கமும் வரத் துவங்கி இருக்கின்றது.செய்திகளை மட்டும் மக்கள்முன் வைத்துவிட்டு தன் கருத்துக்களை வெளியில் சொல்லாமல் இருந்துவந்த தினத்தந்தியின் பாணி இதன் மூலம் சற்றே மாறுகின்றது.

நேற்றைய தலையங்கத்தில் “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் நிர்ணயிப்பது பங்கு சந்தையே என்ற செய்தி இருந்தது.ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து.பங்கு சந்தை என்பது வணிக நிறுவனங்களின் பங்குகளை பிறர் வாங்கவும்,விற்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. எப்படி நம்மூர் உழவர் சந்தை மட்டுமே நம் ஊரின் பண,வரவு செலவை நிர்ணயிப்பதில்லையோ அதுபோல பங்குச்சந்தை மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் நிர்ணயிக்க முடியாது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை விவசாயம்,தொழிற்சாலைகளின் உற்பத்தி,ஏற்றுமதி,இறக்குமதி வணிகம்,இயற்கை வளங்கள்,உட்கட்டமைப்பு,தங்கம் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு,மக்கள்தொகை,சுகாதாரம்,கல்வி என்று எத்தனையோ காரணிகள் சேர்ந்துதான் நிர்ணயிக்கின்றன. நான் பொருளாதாரம் படித்தவன்.ஆனால் தினத்தந்தி போல எளிமையாக விளக்கத் தெரியாதவன்.இதற்கு மேலும் சொல்லிகொண்டு இருந்தால் போர் அடிக்கும்.போதும் நிறுத்திக்குவோம்.

தினத்தந்தி தலையங்கம் எழுதுவதை அதன் கால்நூற்றாண்டு வாசகனாய் பெரிதும் வரவேற்கின்றேன்.ஆனால் ஒரு செய்தியை அல்லது விஷயத்தைத் தலையங்கத்தில் தன் கருத்தாய் முன் வைக்கும்போது அதன் உண்மைநிலை சிறிதும் மாறாமல் இருப்பதை அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு பலமுறை உறுதிப்படுத்தி வெளியிட்டு விற்பனையில் இன்னும் பல நூற்றாண்டுகள் சரித்திரம் படைக்க தந்தியை வாழ்த்துகின்றேன்.

டிஸ்கி : நீண்ட நாட்களாக பதிவர் நாண்பர்கள் ஜெய்ஹிந்துபுரம்,சகோதரி நாஸியா,கேபிள் சங்கர்,முரளி கண்ணன்,தாமிரா மற்றும் சிலர் பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்.


தம்பியின் டைரிக் குறிப்புகள் (08/06/2010)

கலைஞர் பரணி


என் பெயருக்குப் பின்னாலே

பெருமையாப் பல பட்டம்!

அதைநான் பெற்றிடவே

நீ தந்தாய்

இட ஒதுக்கீடு சட்டம்.

ஊரென்ன சொன்னாலும்

கவலையில்லை.

உந்தன் புகழ்பாடித்

திரிவதே என் முழுவேலை.

அகவை 87 கண்ட

தலைவர் கலைஞர்

வாழிய!வாழிய!வாழியவே!


******************************************************

சுமார் கால் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு வந்து இருகின்றது. குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களுக்கு(!) இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.யூனியன் கார்பைடு கம்பெனிஇன்றுவரை எந்த நஷ்டஈடும் வழங்கவில்லை.பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற வாசலில் இந்த அநீதியைக் கண்டித்து போராடியதைத் தொலைக்காட்சியில் காண நேரிட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அவர்களின் போராட்டத்தின் வீரியம் குறையவேயில்லை....
விஷவாயுவின் அழிவைப்போல.அவர்களுக்கு நஷ்டஈடு தொகையும் பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை....... தண்டனையைப்போல.


*******************************************************

எங்கள் ஊரில் இருந்து சென்னையில் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கும் பல பெற்றோர்களின் கனவு பெரும்பாலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாய்த்தான் இருக்கின்றது. நான் சத்தியபாமாவில் படித்தபோது அது நிகர்நிலைப் பல்கலைக் கழகம் இல்லை. எனவே எனது எம்.பி.ஏ. சான்றிதழ் சென்னை பல்கலைக் கழகத்தால் அளிக்கப்பட்டது. பின்னர் வெளிநாட்டில் நான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு எனக்குப் பட்டம் குடுத்த சென்னைப் பல்கலைக்கழகம் தெரிந்து இருந்தது.ஆனால் அதே நேரத்தில் என்னோடு பணியில் இருந்த நிகர்நிலைப் பல்கலைவாசி ஒருவரின் கல்லூரி பற்றி அங்கு இருந்த வெளிநாட்டவர் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயமாக அண்ணா பல்கலைக் கழகம் உலகம் முழுவதும் அறிந்தது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் சேர்ப்பது தவிர்த்து அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் வரும் கல்லூரிகளில் சேர்ப்பது உத்தமம் என்பது என் எண்ணம்.


********************************************************



வருகின்ற 30 ஆம் தேதி அன்று அமெரிக்கா வருகின்றேன். 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரிலும், 3,4, மற்றும் 5 அன்று கெனக்ட்டிகட் பெட்னா விழாவிலும், 7,8 மற்றும் 9 அன்று சான்பிரான்சிஸ்கோவிலும் இருப்பேன். அங்குள்ள பதிவர் நண்பர்களைப் பார்க்கவும்,பேசவும் முடிந்தால் மகிழ்வேன்.அலுவலகப் பணியாக வரும் என்னை பெட்னா விழாவிற்கு அழைத்த அண்ணன் பதிவர் பழமைபேசி அவர்களுக்கு என் நன்றி. கொடுமையான விஷயம் கவிஞர்.தாமரை தலைமையில் நடைபெறும் கவியரங்கில் நானும் பங்கேற்பாளர்.


*******************************************************

சமீபத்தில் ரசித்த கவிதை



"இறந்த பின்பும்

ஒரே குழியில் புதைபடவேண்டும்''

என்றெல்லாம்

பேசிக்கொண்டவர்கள் நாம்.

காலம்

கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா....?

பார்த்தும்... எது குறித்தும்

பேசாமல் பிரிவதற்கு.

--- இளம்பிறையின் கவிதைத் தொகுப்பில் இருந்து.

*******************************************************



அறிஞரின் தத்துவம் :

கண்ணா, அடுத்தவங்க நம்மளை என்ன சொல்றாங்கன்னு கவனிக்கிற அதே நேரத்துல நம்ம சொல்றதையும் மத்தவங்க கவனிக்கிறாங்கங்குற எண்ணம் எப்போதும் வேணும்.