90 களின் ஆரம்பம், நான் சென்னைக்குப் படிக்க வந்த புதிது.எல்லாமே என் கண்களுக்கு அதிசயமாகத் தெரியும்.சிக்னல் உட்பட. தியாகராய நகரிலுள்ள பர்கிட் ரோடு சிக்னல்தான் கிராமப்புறத்தில் இருந்து வந்த நான் முதன்முதலில் பார்த்த சிக்னல்.பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள சஃபா காபி செண்டரில் காபி வாங்கிக் குடித்தபடி சிக்னலில் நின்று போகும் வாகனக் கடல்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்பது எனது அன்றைய பிரதான பொழுதுபோக்கு.அப்போதெல்லாம் பைக்,கார்களோடு சைக்கிள்களும் சிக்னலுக்கு நின்றுதான் செல்லும்.சிக்னலை மீறும் சைக்கிள் ஓட்டிகளை போலீஸார் நிறுத்தி காற்றைப் பிடிங்கி அனுப்புவதை பலமுறை கண்டிருக்கின்றேன்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வந்த வழக்கம் குறைந்து போய் இன்று முற்றிலும் இல்லாமலேயே போய்விட்டது. ஆம் இன்றைக்கு சென்னையில் நீங்கள் சைக்கிளில் பயணிப்பவர்களாக இருந்தால் சிக்னல்களில் நின்று செல்லவேண்டிய அவசியம் இல்லை.சிகப்பு விளக்கு எரிந்தாலும் நீங்கள் பாட்டுக்கு ஜவடாலாக போய்க்கொண்டே இருக்கலாம்.காவலர் இருந்தாலும் கேள்வி கேட்க மாட்டார்.காரணம் நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்.உங்களுக்கு சல்யூட் அடித்து அனுப்ப வேண்டியது அவர் கடமை.
மனிதனுக்கு பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் வந்தால்தான் ஆத்திரம் வரும் என்பதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. நேற்று ராதாகிருஷ்ணன் சாலையில் கடற்கரை ரோடு நோக்கி சென்றுகொண்டு இருந்தேன்.டி.டி.கே சாலை சந்திப்பில் பச்சை விளக்கு எரிகின்றதே என்று நான் வாகனத்தை செலுத்தியபோது சட்டென்று குறுக்கே வலப்புறம் இருந்து வந்த சைக்கிள் ஓட்டியால் ஒரு நிமிடம் நிலைதடுமாறிப் போய்விட்டேன்.நான் திடீர் என நிறுத்தியதால் பின்னால் வந்த டூவீலர்காரர் என் வாகனம் மீதுமோதி கீழே விழுந்தார். எழுந்தவர் முதலில் திட்டியது என் அம்மாவை. பின் நிலமை புரிந்து அந்தத் திட்டை அந்த சைக்கிள் ஓட்டி மேல் செலுத்தினார். அதற்குள் அந்த சைக்கிள் ஓட்டி அவர் வீட்டுக்கே போய் சேர்ந்திருப்பார்.
இந்தக் கூத்தையெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே கவனித்த அங்கிருந்த காவலர் என் அருகில் வந்து நான் திடீர் என நிறுத்தியதால்தான் இந்த சிறு விபத்து நடந்ததாகவும் அதனால் என் மேல்தான் தவறு எனவும் அவருடைய மாமூல் வாழ்க்கைக்கு அடிப்போட்டார். என் சீற்றம் கண்டு பின் விலகிச் சென்றார்.இது எனக்கு மட்டும் நடந்த அனுபவம் அல்ல. தினம்தோறும் சென்னையில் பலருக்கும் நடக்கும் அனுபவம் இது.சிக்னலில் எதைப்பற்றியும் கவலையில்லாது குறுக்கே வரும் சைக்கிள் ஓட்டிகளால் தினமும் சென்னையில் சிறு விபத்துகள் நடப்பதை நானே பலமுறை கண்டிருக்கின்றேன்.இப்போது அனுபவமும் பட்டுவிட்டேன்.இவர்களது விதிமீறலால் நடக்கும் விபத்துகள் பெரும்பாலும் மிகச் சிறு சேதத்தை மட்டுமே (வாகன உரசல்கள் மற்றும் சிறு காயங்கள்) ஏற்படுத்துவதால் காவல்துறையின் ரெக்கார்ட்டுகளில் வருவதில்லை.அதனால்தானோ அல்லது பொருளாதார ரீதியாக இவர்களால் தங்களுக்கு ஆதாயம் இல்லை என்பதாலோ போக்குவரத்து காவல்துறை இவர்களை மட்டும் கண்டுகொள்வதேயில்லை.உடல் உறுப்புகளை இழப்பதும்,உயிரை இழப்பதும் நிகழ்ந்தால் மட்டும்தான் சட்டப்படி விபத்தா? கைகால்களில் ஏற்படும் சிராய்த்தல்கள், சிறு காயம் மற்றும் வாகனத்திற்கு சிறு சேதம் போன்றவை நிகழ்ந்தால் அது விபத்துக் கணக்கில்லையா??
சென்னை நகர காவல்துறை கமிஷனர்(போக்குவரத்து) அய்யா அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. அய்யா, சைக்கிள் ஓட்டிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?? உங்கள் பதில் ஆம் என்றால் குடிமக்களிடையே ஏன் பாகுபாடு பார்கின்றீர்கள்?? அப்படியே டூவீலர்,திரீவீலர் மற்றும் ஃபோர்வீலர் ஓட்டிகளையும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்க வேண்டியதுதானே?!?!?!!

