நாயும் பிழைக்காது இந்தப் பிழைப்பு

சமீபத்தில் நான் என் நண்பருக்கு அனுப்பிய மெயிலையும் அதற்கு அவர் அனுப்பிய பதில் மெயிலையும் பொதுவில் வெளியிட விரும்புகின்றேன்.காரணம் இது பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால்தான். வாசகர் கடிதம் வெளியிட்டாத்தானே பிரச்சனை வரும்.இது என் நண்பரின் பதில் கடிதம்தான் :)



*******************************************************

அன்பின் அண்ணன் மதிக்கு,

தங்களின் நலமும்,அண்ணி மற்றும் முரளியின் நலமும் அறிய விளைகின்றேன். தற்போது முரளியின் உடல்நலம் எப்படி உள்ளது?? அவனை கடந்தமுறை பார்த்து வந்ததில் இருந்து மிகுந்த மன சங்கடமாகவே உள்ளது. என்னால் முடிந்தவரை எங்கெல்லாம் இதற்கு மருத்துவ வசதி வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை அறிய முயற்சிக்கின்றேன்.(நீங்கள் இதற்கு மருத்துவமே இல்லை என்று சொன்னாலும்கூட). பிறகென்ன விஷேசங்கள். ஃபோனில் அழைக்க நினைத்தாலும் அளவுகடந்த வேலை அதை மறக்கடித்து விடுகின்றது. மார்ச் மாதம் என்பது என் போன்ற கணக்கபிள்ளைகளுக்கு மிகுந்த பணிச்சுமை உள்ள கொடுமையான மாதம் என்பது உங்களுக்குத் தெரியும்தானே!! சரி, அடுத்தமுறை நேரில் வரும்போது பார்ப்போம்.

அன்பின் மகிழ்வில்,

எம்.எம்.அப்துல்லா.

*********************


அன்பு அப்துல்லாக்கு,

நீயும்,தங்கையும், குழந்தைகள் அர்ஷியா,ஹிபா மற்றும் அனைவரின் நலம் அறிய ஆவல். இங்கு நான் நான்,அண்ணி,முரளி மற்றும் அனைவரும் நலம்.


வெறும் வார்த்தைக்குதான் நலம் என்று சொல்கிறேனே தவிர மற்றபடி முரளியின் உடல் நிலை பற்றியும் அதனால் எங்கள் இருவரின் மனநிலை பற்றியும் உனக்குத் தெரியும். உன்னையல்லாமல் என் நண்பர்கள் பலருக்கும் தெரியும். அதில் ஒரு நண்பர் (பெயர் வேண்டாம்.. ஒரு நண்பர் என்றே வைத்துக் கொள்வோம்.) முரளி மேல் ப்ரியம் அதிகம் உள்ளவர். அவனுடன் பேசும் போதும், அவனுடைய ஐக்யூ வைப் பார்த்தும் இவ்வளவு ப்ரிலியண்டா இருக்கானே, இவனுக்கா இப்படி என்று ரொம்ப அனுதாப படுவார்.

அவருக்கு ஒரு நண்பர். டாக்டர் என்றுச் சொல்லிகிட்டு இருந்தார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும் ஜோசியக்காரர் ஒருவரும் நண்பர். அவருடைய நண்பர் டாக்டரிடம்   முரளியைப் பற்றிச் சொல்லி குணம் ஆக்க முடியுமா எனக் கேட்டு இருக்கின்றார். அவரும் இதெல்லாம் ஜுஜூபி மேட்டர். நான் குணப் படுத்திவிடுகின்றேன் என்றுச் சொல்லியிருக்கார்.

என் நண்பரும் என்னிடம், அண்ணே (என்னை அண்ணே என்றுதான் அழைப்பார்) இந்த மாதிரி ஒரு டாக்டர் இருக்கார். முரளி பற்றி அவரிடம் சொல்லியிருக்கேன். குணப்படுத்த இயலும் என்றுச் சொல்லுகின்றார் என என்னிடம் சொன்னார். அதன் பின் எனக்கும் அவருக்குமான உரையாடல்.

நான் : அப்படியா ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரு விஷயம் ...

நண்பர் : சொல்லுங்கண்ணே.

நான் : அவர் வைத்தியம் பார்க்கட்டும். குணம் ஆனால்தான் பைசா கொடுப்பேன் அதுவரை ஒரு பைசா கொடுக்க மாட்டேன். இதற்கு முன் ஒருவர் இது மாதிரி சொல்லி 3 லட்சத்திற்கு மேல் செலவு.எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. பணம் கொடுப்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் குணமடைந்தபின் தான் பணம் குடுப்பேன்.

நண்பர் : சரிங்கண்ணே. அவரிடம் நம்ப இரண்டு பேரும் பேசலாம்.ஆனால் அதற்கு முன்னாடி முரளி ஜாதகத்தை அவர் ஜோசியக்கார நண்பர் பெயர் சொல்லி அவரிடமும் கேட்கலாம். அவர் ரூ 300/- பீஸ் வாங்குவார். உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், அதை நான் கொடுக்கின்றேன். ஜாதகத்தை மட்டும் நீங்க எடுத்துவாங்க.

நான் : ரூ. 300 தானே பரவாயில்லை. கொடுக்கின்றேன். (அவர் என்ன சொல்லுகின்றார் எனப் பார்க்கலாம் என மனதற்குள் நினைத்துக் கொண்டேன்).

இரண்டு நாள் கழித்து அவர் ஜோசியக்கார நண்பரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி நாங்க இருவரும் பார்க்கப் போனோம். அவரும் முரளியின் ஜாதகத்தை இப்படி அப்படி புரட்டிப் பார்த்து, ஒரு 20 நிமிஷம் என்ன என்னவோ கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு, இந்த உடல் நிலை நிச்சயம் குணமாகிவிடும். அதனால் இப்போ வைத்தியம் பாருங்க எல்லாம் சரியாகிவிடும் என்றுச் சொன்னார்.

அப்படி, இப்படி என்று ஒருவாரம் கழித்து அந்த டாக்டர் நண்பர் வந்தார். முரளியைப் பார்த்தார். கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துவிட்டு, சரியாக ஒரு வருஷத்தில் இவனை ஓட வைக்கின்றேன் எனச் சொன்னார். அப்போது நான், நீங்க சொல்வது எல்லாம் சரி. ஒத்துக்கிறேன். உங்களால் நல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனால், அதுவரை உங்களுக்கு எந்தவிதமான பணமும் கொடுக்க மாட்டேன். ஒன்றுச் செய்யலாம், நீங்க என்ன என்ன செலவு செய்கின்றீர்களோ அனைத்தையும் எழுதி வையுங்க. உங்க போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, மருந்து செலவு எல்லாம் எழுதி வைங்க. முரளி குணம் அடைந்த அடுத்த நொடி உங்களுக்கு அந்த பணம் + 5 லட்சம் தருகின்றேன். அது போக நீங்க செய்யும் வைத்தியம் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்வோம். அதனை நீங்க சொல்லும் டிவியில் ஒரு மாதத்திற்கு விளம்பரம் செய்யும் ஆகும் செலவும் என்னோடது என்றேன். உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லை என்றால், இதை ஒரு நல்ல வக்கீலை வைத்து அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். உங்களுக்கு சாதகமாகவே போட்டுக்கலாம் என்றும் சொன்னேன். அதற்கு அவர் அக்ரிமெண்ட் எல்லாம் வேண்டாம். நிச்சயம் சரி செய்கின்றேன் என்றுச் சொல்லிவிட்டு, அதற்கு முன் நீங்க ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊர் மாயவரம் பக்கத்தில் இருக்கு அங்கு போய் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்திருங்க என்றும் சொன்னார்.

நானும் அவர் சொல்கின்றார் என்பதற்காக, ஸ்ரீவாஞ்சியம் போய் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த தகவலை அவரிடமும் தெரிவித்தேன். அவரும் அடுத்த வாரம் வருவதாக போனில் சொன்னார். சொன்ன நாள் அன்று வரவில்லை. அதற்கு இரண்டு நாள் கழித்து என்னை போனில் அழைத்து, தான் ஒரு இடத்தில் இருப்பதாகவும் என்னை வந்து அழைத்துப் போங்க என்றும் சொன்னார். அன்று பல அவசர வேலைகள் இருந்தன. அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முரளிக்காக ஓடோடி சென்று அவரை அழைத்து கொண்டு வீட்டிற்குப் போனோன். போகும் போதே அவரிடம், எனக்கு சொன்னா சொன்ன நேரத்திற்கு வரணும். இல்லாட்டி எனக்கு பிடிக்காது என்பதை நாசுக்காக சொன்னேன். புரிந்து கொண்டாரா என எனக்குத் தெரியவில்லை. அதன் பின் இரண்டு தடவை வீட்டிற்கு வந்தார். இரண்டு தடவை அவர் வைத்தியம் செய்தபின், முரளி அப்பா எனக்கு இந்த வைத்தியம் வேண்டாம். உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்கின்றது என்றான்.

இதற்கிடையில், அந்த டாக்டர் என் நண்பரிடம், நான் தங்கும் செலவுக்காகவது பணம் கொடுக்கச் சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின் அந்த டாக்டர் என்னுடன் போனில் பேசவேயில்லை. நான் கூப்பிட்டாலும் போன் எடுப்பதில்லை. இப்படியாக ஒரு மாதம் ஓடிவிட்டது. பல வேலைகளால் நான் என் நண்பரை பார்க்கவும் இல்லை. ஒரு மாதம் கழித்து என் நண்பரை பார்த்தபோது, அவர் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார். என்ன விஷயம் என்று நான் கேட்ட போது, அவர் வைத்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கையே இல்லை. அவர் வரும் போது போய் கூப்பிட்டுக் கொண்டு வரமாட்டேன் என்கின்றீர்கள். அதனால் அவர் இனி வரமாட்டார் என என்னிடம் சொன்னார். அதற்கு நான், அது அப்படியில்லை. இந்த உடல் நிலைக்கு அவர் வைத்தியம் பார்த்து சரி செய்தார் என்றால், நிச்சயம் உலகப் புகழ் கிடைக்கும். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப் படவேயில்லை. மேலும் குணம் ஆனவுடன் நான் பணம் கொடுக்கின்றேன் என்றுச் சொல்லியிருக்கேன். முதலில் பணம் கொடுக்கமாட்டேன் என்றுச் சொல்லுகின்றேன். அதற்காகத்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கின்றார் என நான் சொல்லவும், என் நண்பர் மேலும் டென்ஷன் ஆகி, உங்க குழந்தை மேல் உங்களுக்கு அக்கறையில்லை, அது இது என்று பேச ஆரம்பித்தார்.

அய்யா இது மாதிரி பேசாதீங்க. அவரால் முடியவில்லை. பணம் மட்டும்தான் அவரின் குறி. அதற்கு நீங்க பலியாகிவிடாதீங்க அப்படின்னு சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டேன்.

சில நாள் கழித்து இருவருக்கும் பொதுவான வேறு ஒரு நண்பரைச் சந்தித்தப்போது, அவரும் நான் செய்தது சரிதான் என்றும், அந்த டாக்டர் என்று சொல்பவர் சும்மா டகால்டி பார்ட்டி என்றும் சொன்னார்.

உலகத்தில் எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க என்று நினைத்து மருகாமல் இருக்க முடியலீங்க.எங்களுடைய  இத்தனை துன்பங்களுக்கு இடையில் உன் போன்ற உறவுகளின் பிராத்தனை மட்டும்தான் அவனுக்கான மருந்தாக அமையும். எங்கே வைத்தியம் கிடைக்கும் என்று தேடி உன் நேரத்தை வீணாக்காமல் அவனுக்காக குணமடைய பிராத்தனை செய் அது போதும்.

அப்புறம் உன் போன்ற கணக்கப்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்குத் தேர்வு, பணியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்கம் டாக்ஸ் பிரச்சனை என அனைவருக்குமே மார்ச் கொடுமையான மாசம்தான். பொலம்பாம போய் வேலையப்பாரு.

இப்படிக்கு,

உன் அன்பு அண்ணன்,

மதியழகன்.


டிஸ்கி : இப்படியும் சம்பாரிக்க நினைப்பவர்களை என்ன செய்வது? ச்சீய் நாயும் பிழைக்க்காது இந்தப் பிழைப்பு.



வெண்மேகக் கருப்பு நிழல்கள்




















ஊடுருவிப் பார்க்கும் பார்வை

ஊனுருவிப் பார்க்கும் உயிர்

எதிர்த்து நிற்கும் எல்லாம்

எதையும் தகர்க்கும் திடம்

கடைசியில் நடக்கும் கலவி

கடந்தே செல்லும்

தொடர்ந்தது எல்லாம்!

பட்ஜெட் பார்வை

ரயில்வே பட்ஜெட் முடுஞ்சுருச்சு.மைய அரசின் பட்ஜெட்டும் முடுஞ்சுருச்சு. அடுத்து மாநில அரசின் பட்ஜெட் விரைவில் வரும்.ஒரு பட்ஜெட் வந்தவுடனே என்னவெல்லாம் நடக்கும்னு பார்ப்போம்.

எந்த ஆளும்கட்சி பட்ஜெட்டைத் தாக்கல் செய்கின்றதோ அந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்களும்,மக்கள் பிரதிநிதிகளும் மக்களை உய்விக்க வந்த ஒரே நிவாரணி இந்த பட்ஜெட் என்ற ரேஞ்சில் பேட்டிகள் அளிப்பார்கள்.ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் நல்ல பட்ஜெட் என்று ஒரு சப்போர்ட்டிங் அறிக்கை விட்டு அவர்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள். எதிர் கட்சிகளின் தலைவர்கள் புதிதாக அறிமுகப்படுத்திய வரிகள் மக்களை நேரடியாகத் தாக்கும் (அதென்ன கொரில்லாவா சைடில் இருந்து தாக்க??) என்று கடுமையான அறிக்கை ஒன்றை விடுப்பார்கள்.அப்படியே அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அறிமுகப்படுத்திய வரிகளை வசதியாக மறந்தும்விடுவார்கள். எதிர்கட்சிக்களின் அறிக்கையில் முக்கியமான இன்னோரு வாசகமும் இருக்கும்.அது... ”இந்த பட்ஜெட் வளர்ச்சித் திட்டங்கள் எதனையும் பிரதிபலிக்கவில்லை”. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்த வாசகம் எதிர்கட்சிகளின் அறிக்கையில் இருக்கின்றது. சுதந்திரம் அடைந்தபோது இருந்த நாட்டைவிட,மாநிலத்தைவிட இன்றைய நிலை உயர்ந்ததாகவே இருப்பது கண்கூடு.அப்படி இருக்க வளர்ச்சித் திட்டம் எதுவும் இல்லாமலேயே எப்படி வளர்ந்தது என்பதை மக்களும் யோசிக்க மாட்டார்கள்.எதிர்கட்சிகளும் அந்த ரகசியத்தைச் சொல்லமாட்டார்கள்.

அப்புறம் ஆளும்கட்சி நாங்கள் இத்தனை சதவிகித வளர்ச்சியை வரும் ஆண்டில் அடைவோம்.அதை உத்தேசித்தே இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்வார்கள்.ஆண்டு முடிந்ததும் நாங்க சொன்னது இவ்வளவு, நடந்தது இவ்வளவு என்று அவர்களும் சொல்வதில்லை.யாரும் கேட்பதில்லை. மீண்டும் புதிய இலக்கோடு புதிய பட்ஜெட் வந்துவிடும்.

முன்பெல்லாம் மத்திய பட்ஜெட்டை மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மட்டுமே கவனிப்பார்கள்.ஆனால் சமீபகாலமாக கிராமப் பகுதிகளின் அதாவது பஞ்சாயத்துராஜ் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள்கூட கவனிக்கத்துவங்கி விட்டனர்.காரணம் மத்திய அரசு ஒதுக்கும் நிதி :)

சமீபத்தில் வந்த மத்திய பட்ஜெட் பற்றி பொருளாதார வல்லுனர்களான சக பதிவர்கள் சகோதரி நாஸியா, அண்ணன் சுரேகா போன்றோர் கருத்துரைக்க வேண்டுகின்றேன். மாநில அரசின் பட்ஜெட் வந்ததும் அதுபற்றிய பார்வைகளை நான் எழுதுகின்றேன்.

இன்னோரு முக்கியமான விஷயம்.சமீபத்தில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த மாண்புமிகு.மம்தா பேனர்ஜி அதில் “ரெயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம்” என்று அறிவித்தார். இரயில்வே பட்ஜெட்டுக்கு கருத்து அறிக்கைவிட்ட தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா “ரெயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமையும்”னு சொல்லியிருக்காரு. இப்ப என்ன சொல்ல வர்றீங்க அம்மா?? தாழ்த்தபட்டவர்கள் அறிவில்லாதவர்கள்னு சொல்ல வர்றீங்களா? இல்லை தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தாய்மொழிதவிர வேற்று மொழிகற்க திராணியற்றவர்கள்னு சொல்ல வர்றீங்களா?? இல்லையில்லை நான் அப்படிச் சொல்லலை.அவர்கள் கிராமப்புற பள்ளிகளில் இருந்து வருவதால் ஆங்கிலத்தில் பயிலாது இருப்பார்கள்.அதனால் சொல்றேன்னு சொல்றீங்களா? சரி அப்படியே பார்த்தாலும் கிராமப்புறம் என்றால் அதில் தாழ்த்தப்பட்டோர் மட்டுமா இருக்கின்றார்கள்? செட்டியாரு,முதாலியாரு,வன்னியரு,இஸ்லாமியருன்னு எத்தனையோ பேரு கிராமப்புறத்தில இருக்காங்களே. கிராமப்புற பள்ளிகளின் கல்வித் தரத்தில் எல்லாச் சாதிக்கார மாணவர்களும் தாழ்த்தப்பட்டோரே.கிராமபுறத்துலேந்து வர்ற எல்லாரும் வெள்ளக்கார தொர கணக்கட்டா இங்கிலீசுல பேசுற மாதிரியும், என்னவோ தாழ்த்தபட்டோர் மட்டும் பேசமுடியாம தவிக்கிற மாதிரியும்...

உங்களை உங்க கட்சிக்காரன் எல்லாரும் சசிகலாவைவிட்டு வெளிய வாங்க, கொடநாட்டை விட்டு வெளிய வாங்கன்னு கரடியாக் கத்துறான். அதுலேந்தெல்லாம் நீங்க வாங்க இல்லாட்டி நாசாமாப்போங்க. ஆனா முதல்ல உங்க ஆதிக்கசாதி மனப்பான்மையில இருந்து வெளிய வாங்க. உலகம் ரொம்பப் பெருசு.