நட்சத்திர நன்றி


கடந்த ஒருவாரமாக என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றி. நர்சிம்,குசும்பன்,தாமிரா போன்ற நண்பர்கள் கிண்டலாகச் சொன்னார்கள் “ஒன்னைய ஒருவாரம் தொடர்ந்து எழுத வைக்கணும்னுதான் நட்சத்திரமாக்கிட்டாங்கபோல” .


உண்மைதான் நான் தொடர்ந்து எழுதுபவன் அல்ல.அதேபோல குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதும் ஆசிப்மீரானோ,செல்வேந்திரனோ அல்ல.என்ன எழுதலாம் என்று யோசிக்கும் சமயத்தில் அலுவலக கிரெடிட்டும்,டெபிட்டும் கண்முன்னே வந்து டான்ஸ் ஆடும். அப்படியே புத்தி அங்கேயே போய்விடும். அதுபற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை. காரணம் அதுதான் என் வாழ்க்கை.இது அல்ல. கண்டிப்பாக நான் எழுத்தை என் தொழிலாகக் கொள்ளவுமில்லை. அந்த அளவிற்கு என்னிடம் அதில் சரக்கும் இல்லை. இதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதால்தான் பெரும்பாலும் அலுவலுக்கு ஒதுக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்குவதில்லை.




எழுதுவதுதான் இல்லையே தவிர பெரும்பாலும் அனைத்து வலைப்பூக்களையும் படித்து விடுகின்றேன். சில நண்பர்கள் நீங்கள் என்னுடைய வலைப்பூவிற்கு வருவதில்லையே எனக் கேட்பார்கள்.அப்போது அவர்கள் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதை வரிசையாக கூறும்போது, அப்புறம் ஏன் பின்னூட்டமிடவில்லை?என்பார்கள். யார் சொன்னது பின்னூட்டமிட்டால்தான் வந்துபோனதாய் அர்த்தம் என்று?? :))



அப்புறம் எனக்கு அண்ணன்கள் நர்சிம்,கேபிள் சங்கர் போல வாசகர்கள் எல்லாம் இல்லை.(மொகரைப்பாரு...நீ கிழிக்கிற கிழிக்கு இந்த ஆசைவேற)என்னைப் படிப்பவர்கள் என் நண்பர்கள் மட்டுமே. என்னை வாசிக்கும் என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் மற்றும் என்னை முதன்முதலில் வலையில்  எழுதுத ஊக்குவித்த அக்கா புதுகைதென்றலுக்கும் இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் (பாகம் 5)


ஒரு மனிதன் அரசுப் பொறுப்பில் இருக்கும் காலத்தில் மக்களுக்கு எப்படியும் உதவலாம். தன் கையில் காசு இல்லாவிட்டலும்கூட. எப்படி? உதாரணமாக நீங்கள் அமைச்சராக இருக்கும்போது மருத்துவ உதவிக்கோ அல்லது கல்வி உதவிக்கோ யாரேனும் உங்களை அணுகுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அதேபோல பல தொழில் நிறுவனங்கள் அவர்களது தொழிலுக்காக உங்களது உதவியை எதிர்நோக்கி இருப்பர் அல்லது உங்களால் பலன் அடைந்து கொண்டிருப்பர். நீங்கள் அந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிடம் இவர்களை கைகாட்டி விட்டால் போதுமானது.




திருநாவுக்கரசர் அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மக்களுக்கு உதவிகள் செய்வது இந்த வகையில் ஒரு பிரச்சனையாகவே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் அமைச்சர் பதவி சென்ற பிறகு அதில் முதல் பிரச்சனை துவங்கியது. ஒரு ஸ்திரமான தொழிலைத் தனக்கென ஏற்படுத்திக் கொள்ளத் தவறியதால் பண வரவு மிகவும் குறைந்து போனது. தன்னிடம் இருந்த கையிருப்பும் ஆரம்ப நாட்களில் அ.தி.மு.க (ஜெ) அணியை நடத்தவும் பின்னர் தனிக்கட்சி நடத்தவும் செலவளித்து விட்டதால் பொருளாதாரத்தில் பிந்தங்கினார். அதே நேரத்தில் குடுத்துக் குடுத்து பழக்கப் பட்ட அவரது கையைக் கட்டுப்படுத்தவும் அவரால் முடியவில்லை. இதனால் புதுக்கோட்டை பக்கம் வந்தால் உதவிநாடி வருவார்களே என்று புதுகை பக்கம் வருவதையே வெகுவாகக் குறைக்கத் துவங்கினார். இந்த இடைவெளி அவரது அரசியல் எதிரிகளால் மிகச் சரியாக பயன்படுத்தப்பட்டது. இதுதான் அவரது முதல் சறுக்கல்.


இரண்டாவது, அவருக்கு எந்த சாதிசாயமோ,மதச் சாயமோ எந்த நிலையிலும் அவர்மேல் விழுந்ததுஇல்லை. அனைவருமே அவர் நம்மாளு என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். இந்நிலையில் அவர் பி.ஜே.பி யில் சேர எடுத்த முடிவு கிட்டத்தட்ட தற்கொலை முடிவு. அதே நேரத்தில் அன்றைக்கு அவர்மட்டும் பி.ஜே.பியில் சேராமல் இருந்து இருந்தால் பல விஷயங்களில் அவர் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும். சுருங்கச் சொல்வதானால் புலிவாலைப் பிடித்த நாயர் கதை போன்றது அவரது அன்றைய நிலை. அவர் பி.ஜே.யில் சேர்ந்து உடனே மத்திய அமைச்சரும் ஆனார். ஆனால் அறந்தாங்கித் தொகுதியில் இரண்டாம் மெஜாரிட்டி ஓட்டுகளான மைனாரிட்டிகளின் ஒட்டை முற்றிலுமாக இழந்துவிட்டார். தமிழகமும் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டு திமுகவுக்கு வாக்களிக்கும் மைனாரிட்டிகள் அறந்தாங்கி தொகுதியில் மட்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு தங்கள் வாக்குகளை மொத்தமாக வழங்கி வந்தனர். அவர்களை இழந்ததன் விளைவு கடந்த தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளருக்கு டெப்பாசிட்டே இல்லை.


சுயேட்சையாக எம்.பியாகி பின்னர் அவர் பிஜேபியில் சேர்ந்ததும் தனிப்பட்ட காரணங்களால்தானே தவிர அந்தக் கொள்கைகளின் மேல் எந்தக்காலத்திலும் அவருக்கு நம்பிக்கை இல்லை. பிஜேபியில் அமைச்சராக இருந்த காலத்திலேயே அவர் அதை வெளிப்படையாக மேடைகளிலும்,பத்திரிக்கைகளிலும் கூறுவார். தான் அந்த இயக்கத்தில் இருந்தாலும் தன்னுடைய வாக்காளர்கள் தனிப்பட்ட முறையில் தன்னை ஆதாரிப்பார்கள் என மிகவும் எதிர்பார்த்தார். டெப்பாசிட்டும் போகிறது என்பதை உணர்ந்து இப்போது அதையே காரணம் காட்டி காங்கிரஸில் இணைந்துள்ளார்.


அவர் அடிக்கடி அணிமாறுவதாக தற்போது சிலர் விமர்சிக்கின்றனர். நான் ஒன்றும் அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை...கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஒன்று அவர் அதிமுகவில் இருந்து இருக்கின்றார். அல்லது தனிக் கட்சி நடத்தி இருக்கின்றார். அவர் அணி மாறியது என்பது பிஜேபி போனதுதான். என்னுடைய கருத்து என்னவென்றால் அவர் இறுதிவரை பிஜேபியிலேயே இருந்து இருக்கலாம். காரணம் என்ன கணக்கிற்காக அவர் காங்கிரஸ் சென்றிருக்கின்றாரோ அந்தக் கணக்கு நடக்காது என்பது என் கணிப்பு.



எப்படி???

அனுஜன்யா

எதார்த்த உரசலில்

எழுந்தது மற்றொன்று.

புதியன கண்டறிந்ததாய்

பூரித்தான் மனிதன்.

காலத்தின் கணக்குகளில்

மற்றுமொரு விடை.

சக்கர மேகங்கள்

சடுதியில் கூடின.

நீண்ட பயணங்கள்

நீளமின்றிச் சுழன்றது.

காலத்தின் கணக்குகளில்

தற்போது.....

ஆயிரம் ஆயிரம் விடைகள்.

கண்ணீரின் கணக்குகளுக்கோ

காலம் கடந்தும்

விடைகள் இல்லை!


டிஸ்கி : எளிதில் புரியாத கவிதைகளுக்கு இதைவிடச் சிறந்த தலைப்பு எவன்னாலயும் வைக்க முடியாது :)  அண்ணன் அனுஜன்யா வாழ்க!

அப்பா என்றாலும் அன்பு

நானும் சங்கரனும் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதை விடுத்து மாப்ளை என்று பரஸ்பரம் அழைக்கத் துவங்கியபோது நாங்கள் ஆறாம் வகுப்பில் நுழைந்து இருந்தோம்..கழுத்தில் கட்டிக்க டை,காலில் போட்டுக்கொள்ள ஷூ இதையெல்லாம் விடுங்கள்...சீருடை கூட இல்லாத பஞ்சாயத்துப் பள்ளி எங்கள் பள்ளி. நாட்டுச் சீமை ஓடு வேயப்பட்ட நீளமான கட்டிடம்.உத்திரத்தில் இருந்து அவ்வப்போது விழுந்து பரபரப்பைக் கிளப்பும் மழைத் துளி, சில சமயங்களில் தேளும்கூட. நாங்கள் உட்கார பெஞ்செல்லாம் கிடையாது.ஒன்லி தரைதான். நடுவில் பாதைவிட்டு மாணவர்களும் மாணவியரும் இரு பகுதிகளில் ஐய்ந்தைந்து பேர் வருசையாக மொத்தம் ஆறு வரிசைகளில் பிரித்து அமர்ந்திருப்பர்.


ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு மாறும்போது நானும் சங்கரனும் ஆறாம் வரிசையில் சுவற்றின் ஓரமாக அமர வைக்கப்பட்டோம்.. வகுப்பு துவங்கியதில் இருந்து சங்கரன் ஒன்னுமே எழுதலை. ‘ஏன்டா எழுதாம இருக்க?’ என்று நான் கேட்டபோது பதில் சொல்லாத சங்கரன் ரங்கநாதன்சார் கேட்டப்ப போர்டு லேசா மங்கலா இருக்குது சார் அப்பிடின்னான். அவனை முன்னாடி வரச் சொன்ன சார் இங்கேந்து தெரியுதான்னு கேட்க, நல்லாத் தெரியுது சார்னு சொல்லி சடார் என அங்கேயே அதாவது முதல் வரிசையில் மாணவ,மாணவியரைப் பிரிக்கும் பாதையின் ஓரத்தில் அமர்ந்து விட்டான். என்னாச்சு அவனுக்கு என்ற குழப்பத்திலும்,பதட்டத்திலும் நான் இருக்க, லேசாக பின்னால் திரும்பி என்னை நக்கலாகப் பார்த்து ஒரு குறுஞ் சிரிப்பொன்று உதிர்த்தான்.

அடுத்த நாள் மாலை நான் அவனிடம் ’ஏன்டா கண்ணு சரியா தெரியலைன்னு சார்கிட்ட சொன்னியே! வீட்டுல சொல்லி கண் டாக்டரைப் பாத்தீங்களாடான்னு’ கேட்க, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "கண்ணெல்லாம் நல்லாத்தான் தெரியுது.ஆனா அங்க ஒக்காந்தாத்தான் சிவகாமசுந்தரி புள்ளகிட்ட பேசமுடியும்"அப்படின்னான். எனக்குத் தெரிந்து என் செட்டில் விஞ்ஞானப்பூர்வமாக சைட் அடித்த முதல் நபர் அவன்தான். வருடம் மாறமாற அவன் சைட் அடிக்கும் பெண்களும் மாறிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் அவன் மட்டும் சைட் அடிப்பதில் இருந்து மாறவேயில்லை.

எட்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாறும் நாளை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்..காரணம் அதுதான் பள்ளியில் எல்லோரும் டவுசரில் இருந்து ஃபேண்ட்டுக்கு மாறும் நாள். ஃபேண்டு போட்டதும் எல்லோரும் பெரிய மனுசங்களாக மகிழ்வாக உணர்ந்தோம்.அந்த ஆண்டிலேயே மற்ற அனைவரையும்விட சங்கரனுக்கு சீக்கிரமே ஒரு புரோமோஷன் கிடைத்தது.அது...மீசை.

எங்க எல்லாருக்கும் எட்டிக்கூடப் பார்க்காத அந்த நேரத்தில் சங்கரன் சனியனுக்கு மட்டும் மீசை நல்லாவே வரத் துவங்கியது. பத்தாம் வகுப்பில் நாங்கள் படித்தபோது அனைவரையும் அடிக்கும் சுப்ரமணியன் சார் அவனை மட்டும் அடிக்காமல் இருந்ததற்கு அவன் மீசைகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.எந்தப் பெண்ணையாவது பார்த்தால் தன் இடக்கையால் அதை ஸ்டைலாக நீவிவிட்டுக்கொள்வது அவனது அந்நாள் மேனரிசமானது.

பத்தாம் வகுப்பில் ஒரு ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாள் சங்கரன் என்னிடம் "மாப்ளே! நாளைக்கு எனக்கு பூணுல் கல்யாணம்.கிளாஸ்ல யாருகிட்டயும் நான் சொல்லலை.நீ அவசியம் வந்துருடா".

"பூணூல் கல்யாணம்னா என்னடா?"

"அது வேற ஒண்ணுமில்லை.மொதமொதல்ல எங்களுக்கு பூணூல் மாட்டுறதை பூணுல் கல்யாணம்பாங்க".

"ஒனக்காவது பரவாயில்லைடா.மாட்டுற வேலை. எங்களுக்கு சுன்னத் கல்யாணம்னு ஒன்னு பண்ணுவாய்ங்க.அது எடுக்குற வேலை. உசுரு போகும்" என்ற என்னை பார்த்து சிரித்துக்கொண்டே சென்றான்.

காலை பத்துமணி நிகழ்ச்சிக்கு நான் எட்டு மணிக்கே சங்கரன் வீட்டிற்குச் சென்று விட்டேன்.அண்ணன் வெகு குஜாலாக இருந்ததைக் கண்டு ஃபங்ஷன்னால ஜாலியா இருக்கான்போல என நினைத்தேன். குஜாலுக்கு காரணம் அதுவல்ல..அவன் உறவினர் பெண் காயத்ரி என்று சிறிது நிமிடத்திலேயே புரிந்துவிட்டது. அவள் இருக்கும் பக்கமாகவே இவன் செல்வதும் இருவரும் லுக் விடுவதும் என்னை மட்டும் சாட்சியாக வைத்து நடந்து கொண்டிருந்தது. ஒரு தூண் மறைப்பில் இருந்து அவள் இவனை கைகாட்டி அழைக்க குஷியாக சென்றவன் சற்றே வாடிய முகத்தோடு உடனே திரும்பினான்.

"என்னடா மாப்ள? என்ன சொன்னா?"

"என் மீசை ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாடா"

"அதையேன் வருத்தமாச் சொல்லுற?"

"இல்லைடா பூணூல் போடுறதுக்கு முன்னாடி அதை வழிச்சு விட்டுருவாங்கடா" என்றவன் மேற்றொண்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான்.அப்பொழுதே அவன் கண்கள் கலங்கத் துவங்கியது நன்றாகவே தெரிந்தது. அவனுக்கு மீசை எடுக்கும் அந்த நேரமும் வந்தது.மீசையை எடுக்க வேண்டாம் என்று அவன் அப்பாவிடம் அவன் போராட அவரோ "உனக்காவது பரவாயில்லை மீசையை மட்டும்தான் எடுக்குறாங்க. எனக்கெல்லாம் பூணூல் போட்ட அந்தக் காலத்துல தலையிலே முன்பக்கம் பாதி முடியையும் சேர்த்தே எடுத்துருவாங்க.பேசாம உக்காருடா" என்றார்.

மீசைமேல் நாவிதர் கத்தியை வைத்த அந்த நேரத்தில் அழவே துவங்கிவிட்டான்.

"டேய்!என்டா அழற? ஒரு ஆம்பளைப் பையன் அவனோட தோப்பனார் செத்து கொள்ளி வைக்கிறச்ச மீசை எடுப்பால்ல...அப்போ மட்டுந்தான் அழணும்.இப்போ அழப்படாது" என்ற அவனது அப்பாவின் குரல்கேட்டு எங்கேதான் சென்றதோ அதுவரை இருந்த அவனது கண்ணீர்?

பின்னர் இளநிலை பட்டப் படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்காக நான் சென்னை வந்தபோது சங்கரனும் சென்னைக்கு வேலை கிடைத்து வந்து விட்டான். ஒருநாள் இருவரும் திருவல்லிக்கேணி ரத்னா கஃபே அருகில் டூவீலரில் செல்லும்போது குறுக்கே பாய்ந்த நாயால் கீழே விழ, இருவருக்குமே சமமான அடி. வலியால் என் கண்களில் இருந்து நீர் கொட்ட, சங்கரனைப் பார்க்கிறேன்.அத்தனை வலியிலும் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. எனக்கு தெரிந்து அவன் பூணூல் கல்யாணத்தின் போது அழுததை தவிர வேறெப்போதும் அழுது பார்த்ததேயில்லை.

இன்று காலையில் சங்கரன் போன் செய்திருந்தான். குரல் கொஞ்சம் கம்மியிருக்க," என்னடா சங்கரா..?" என்றேன் "அப்பா போயிட்டாரு வந்திருன்னுட்டு" போனை வச்சிட்டான். எனக்கு தூக்கிவாரி போட்டுச்சு. நேத்து கூட போனில பேசினேன். என்ன ஆயிற்று? என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டான். வீட்டிற்கு போன போது அமைதியாய் இருந்தான். நான் அவனிடம் சென்று என்ன ஆச்சு என்பதை போல அவனை அணைத்து கொண்டேன். இறுக்கமாய் இருந்தான். வீட்டில் அவனின் அம்மா மற்றும் உறவுகள் எல்லாம் கதறி அழுது கொண்டிருக்க, இவன் மட்டும் அழவேயில்லை. அவனை பார்க்க எனக்குள் கொஞ்சம் பதட்டமாய் இருந்தது. அதற்குள் சடங்குகள் செய்ய ஆரம்பிக்க, அவனின் முகம் இன்னும் இறுக்கமாக ஆகிவிட்டிருந்தது.

எனக்கு தெரிந்து இவ்வளவு இறுக்கமாய் அவன் இருந்ததேயில்லை. இடுகாட்டில் மேலும் சடங்குகள் அவனை ஆக்கிரமிக்க, வாய்கரிசி போடும்போது கூட அவன் அழவில்லை, எனக்குபொறுக்கவில்லை. "டேய்.. வீட்டில நீ அழாம இருக்கிறது சரி. ஆனா இங்கயாவது நீ அழுதுடு. இல்லாட்டி ரிலீப்பாக மாட்டே" என்று காதோரம் கிசுகிசுக்க, அவன் என்னை நேராய் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் மின் எரியூட்டியில் வைக்கப்பட்ட அவனது அப்பாவை தீக்குள் அனுப்பிவிட்டு, திரும்பி பார்க்காமல் நடந்துவந்தான்.வெளியே வந்ததும் அவனின் உறவினர்களிடம் சாஸ்திரிகள் அழைத்து எதோ சொல்ல அவனை ஒரு இடத்தில் தரையில் உட்காரவைக்க எதிரே ஒரு நாவிதர் மெல்ல தன் கையிலிருந்த கத்தியை எடுத்து அவனின் மீசைமீது வைத்து மழிக்க ஆரம்பித்த நொடி "ஓ"வென அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சங்கரன். அவனின் அழுகைக்கான சரியான காரணம் எனக்கு மட்டும் புரிந்தது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் (பாகம் 4)




ஒரு தேர்தலில் வெற்றிபெற மக்களுக்குச் சேவை செய்திருந்தால் மட்டும் போதும் என்ற நிலை 1970 களின் மத்திவரை இருந்தது. அன்றெல்லாம் மக்கள் தங்கள் பிரதிநிதிகள் ஊருக்கு ரோடோ,லைட்டோ போட்டால் போதும் என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. அவர்கள் தங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வர வேண்டும்,மொய் வைக்க வேண்டும், அதுபோல நாம் தலையைச் சொறிந்துகொண்டு அவரிடம் போய் நின்றால் அவர் நமக்கு அஞ்சு,பத்து குடுத்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அன்றைய நாட்களில் மக்கள் யாருக்குமே இருக்கவில்லை. ஆனால் இந்த மனநிலையில் சிறிய மாற்றம் வரத் துவங்கியது 70 வதுகளின் இறுதியில்தான்.





1977 ல் வெற்றிகண்ட எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசை பெரிதான குறிப்பாக பண ரீதியிலான குற்றச்சாட்டு எதுவும் எழாதவாறுதான் ஆட்சி புரிந்தார். ஆட்சி அமைத்த ஒரு வருடத்திலேயே அவரது அரசை இந்திராகாந்தி கலைத்துவிட்டார். அடுத்த வந்த தேர்தல்தான் தேர்தல் அரசியலுக்கு பணமும் ஒரு சக்தி என்பதை உணர்த்தத் துவங்கியது. அந்தத் தேர்தலில்தான் மக்கள் வாக்குகோரி வரும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் பணம் தருவதை எதிர்நோக்கத் துவங்கி இருந்தனர். பிரச்சாரத்திற்குச் சென்ற எம்.ஜி.ஆர். இந்த ஆரத்தித் தட்டு பிரச்சனையால் பல இடங்களுக்குச் செல்லவே யோசித்தார். காரணம் அவரிடம் அப்போது அந்த அளவி்ற்குப் பணம் இல்லை. பெரும் வணிகர்களும் அவர் வெற்றிபெற மாட்டார் என உறுதியாக நம்பியதால் தேர்தல் நிதியும் அளிக்கவில்லை. இருப்பினும் எம்.ஜி.ஆர். வென்றார்.



வெற்றி பெற்றபின் இனி பணம் இன்றி அரசியல் இல்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். தன்னுடைய பணத் தேவைகளுக்கான சுரங்கமாய் சாராய லாபியை உருவாக்கினார். எம்.ஜி.ஆர் மட்டுமல்ல அவரது அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும்கூட வருங்கால அரசியல் பணம் சார்ந்தது என்பதை உணர்ந்து தங்களுக்கென்று தொழில் அமைப்புகளை உருவாக்கத் துவங்கினர். பஸ் நிறுவனம் துவங்கிய முத்துசாமி, ஜின்னிங் பேக்டரி துவங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர், கல்வி நிறுவனங்கள் துவங்கிய ஜேப்பியார்,ஜெகத்ரட்சகன்,ஏ.சி.சண்முகம், வேலூர்.விஸ்வனாதன்,தம்பிதுரை, திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்ட ஆர்.எம்.வி என அன்றைய அதிமுக பெரும் தலைகள் அனைத்துமே அரசியலோடு பணம் பண்ணும் வழியையும் சேர்த்தே பார்க்கத் துவங்கினர். அதிமுகவில் அனைவரும் உணர்ந்த இதை ஒரே ஒருவர் மட்டும் உணராமல் போனார். அவர்?...வேறு யார் நமது திருநாவுக்கரசர்தான்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! (பகுதி 3)

அவருக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கிற்குப் பின் இருந்த இரகசியம் மிகவும் எளிது.அவர் தொகுதிக்கு எதுவும் செய்யாவிட்டாலும் தொகுதி மக்களோடு இருந்தார்.அவர்களது நல்லது,கெட்டது அனைத்திலும் இருந்தார். அவரை நேரில் பார்த்தால் நமது சிரமம் அனைத்தும் நீங்கிவிடும் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்களிடம் அவரது நெருக்கம் இருந்தது. கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் மினியேச்சர் போலவே புதுகை மாவட்டத்தில் மாறிப்போனார் திருநாவுக்கரசர்.










அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் புதுக்கோட்டைக்கு அவர் வந்து காலையில் டீ குடித்த பின் மக்களைச் சந்திக்கத் துவங்கினால் காலை உணவு,மதிய உணவு உண்ண அவரால் முடியவே முடியாது.அவ்வளவு கூட்டம் நம்பிக்கையோடு அவரைச் சந்திக்க வரும். இரவு உணவு மட்டுமே அவரால் உண்ண முடியும். அவரும் சோர்வின்றி உணவு,உறக்கம் பற்றிய கவலையின்றித் தொடர்ந்து மக்களைச் சந்திப்பார்.




திருமண உதவி நாடி வருபவர்கள்,கல்விக் கட்டணம் கேட்டு வருபவர்கள்,மருத்துவ உதவிக்கு வருபவர்கள் என எவர் வந்தாலும் ஜாதி,கட்சி வித்யாசமின்றி அள்ளிக் குடுத்தார். கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால் எளிய மக்களின் சிரமத்தை இயல்பாகவே அவர் உணர்ந்து இருந்தார்.நான் உணர்ந்தவரை இந்த உதவிகளை எல்லாம் அவர் விளம்பரத்திற்காகவோ,பெருமைக்காகவோ செய்ததாகத் தெரியவில்லை. காரணம் இதையெல்லாம் அவர் விளம்பரப்படுத்தி கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களிடம்கூட யாருக்கு என்ன உதவி செய்தேன் என்பதைச் சொல்லாத பழக்கம் இன்றுவரை அவருக்கு இருக்கின்றது.



அவர் எம்.ஜி.ஆர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மூன்று சட்டசபை தேர்தல்களைச் சந்தித்தது. அந்தத் தேர்தல்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் எம்.ஜி.ஆர் கட்சி கூட்டணியே மொத்தமாக வழித்துத் துடைத்துக் கொண்டு செல்லும்.இந்த அபார வெற்றிகளுக்கு திருநாவுக்கரசரின் தனிப்பட்ட செல்வாக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை எந்த அரசியல் நோக்கர்களும் மறுப்பின்றி ஒத்துக்கொள்வர்.




எது அவரது வளர்ச்சிக்கும்,செல்வாக்கிற்கும் முதல் காரணமாக இருந்ததோ அதுவே அவரது வீழ்ச்சிக்கும் முதல் காரணமாக அமைந்து போனது விதி ஆடிய வித்தியாசமான விளையாட்டு. எப்படி?

தொடர்வினை

முட்கள்


எப்பொழுதும்

தொண்டையில் சிக்கும்!



ஒன்று....

குள‌க்க‌ரையோர‌ம்

புழுவின் தொண்டையில்!



ம‌ற்றொன்று....

குள‌த்தின் உள்ளே

மீனின் தொண்டையில்!



பிறிதொன்று....

குழ‌ம்பானபின்

சுவைப்ப‌வ‌ன் தொண்டையில்!

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

நெருக்கி அழுத்தும் வேலைகளுக்கு மத்தியில் ஒரு குளிர்தருவாய் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நிகழும். எங்கள் என்பது நானும்,கேபிள் சங்கரும் எங்களது திரைப்படத்துறை நண்பர்களும் என்பதை அறிக. சென்றமுறை எங்கள் ஜமாகூடி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது பேச்சு பல்வேறு விஷயங்களுக்குச் சென்று இறுதியில் வேலைக்காவாத தொலைக்காட்சிகளில் வேலைக்காவாத விஷயமாய் தாம்பத்யத்தைப் பெரிதுபடுத்திப் பேசும் ஒரு டுபாக்கூர் டாக்டரின் பக்கம் சென்றது.தொலைக்காட்சியில் அந்தஆள் அள்ளிவிடும் டுபாக்கூரைப் பற்றி அனைவருமே கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஹைலைட் அண்ணன் கேபிள் அவரைப் போலவே டிட்டோவாக நடித்துக்காட்டியதுதான்.




அந்த டுபாக்கூரின் நிகழ்ச்சியை நான் முழுவதுமாகப் பார்த்ததில்லை.சேனல்களை மாற்றும் இடைவெளியில் எப்போதாவது அந்த ஆளின் தலை தென்படும்.அத்தோடு நானும் நானும் அதை தலைமுழுகிவிட்டு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளின் நடிப்பைப் பார்த்து வெடித்துச் சிரித்ததில் அதன் மூலகர்த்தாவான அந்த டுபாக்கூர் டாக்டரின் நிகழ்ச்சியை ஒரு முறையாவது முழுமையாகப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.



அப்படி ஒரு சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது.அந்த ஆள் முதலில் அவனது பரம்பரை எப்படிப்பட்டது? அதன் சிறப்புகளென்ன என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மெதுவாக மேட்டருக்கு வந்தான். அதாவது வயது வந்த இளைஞன் (அட லூசே!வயது வந்தாத்தானேடா இளைஞன்?) சுய இன்பம் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விலாவாரியாக விளக்கிக்கொண்டு இருந்தான். கைநடுக்கம்,தலைவலி,கழுத்துவலி,முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதெல்லாம் ஆண்மை இழப்பதற்கான அறிகுறி என்றான். நான் அறிந்தவரை இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே இதில் ஏதோவொன்று கண்டிப்பாக இருக்கும்.காரணம் அளவுக்கு அதிகமான வேலை அழுத்தமும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதும்தான். இதைச் சரியாக புரிந்துகொண்ட அந்த டுபாக்கூர் கரெக்ட்டாக இதையே காரணமாகச் சொல்லும் போது ஒரு பக்கம் கோபம் ஏற்பட்டாலும் அந்த டுபாக்கூரின் கிர்மினல் அறிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.



நான் அறிந்தவரை ஓரிரு நோய்களின் பக்கவிளைவாக ஆண்மைக் குறைவு ஏற்படுவதைத்தவிர மற்றபடி 99% இது மனநலம் சம்மந்தப்பட்டதே.உடல்நலம் சம்மந்தப்பட்டதல்ல. இதையெல்லாம் நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான். அதாவது சில இளைஞர்கள் திருமணத்திற்குமுன் கைப்பழக்கம் செய்யாமல் யோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் பணிநிமித்தம் வாரக்கணக்கிலோ,மாதக்கணக்கிலோ அல்லது வெளிநாட்டு வேலையில் இருப்பதால் வருடக்கணக்கிலோ மனைவியைவிட்டு பிரிந்து இருக்கும்போது இந்தப்பழக்கத்தை மேற்கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனைவியைத் திருப்திபடுத்துவதாக நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்.ஆனாலும் அவர்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.எனவே அவர்களும் தவறாமல் தன்னிடம் அவசியம் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அக்கறையோடு(?) அழைத்தான். மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் சொன்னான். அதாவது திருமணத்திற்குமுன் இந்தப் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற ஒரேஒரு பிரச்சனைதானாம். ஆனால் திருமணத்திற்குப்பின் வாரக்கணக்கில் பிரிந்து இருப்பவர்களுக்கு இரண்டு பிரச்சனையாம்.ஒன்று இந்த பழக்கத்தால் வரும் ஆண்மைக்குறைவு. மற்றொன்று திருப்தி இல்லாததால் அவர்கள் மனைவியரும் பாதை தவறி வேறு உறவுக்குச் சென்று விடுகின்றார்களாம்.


சரியாக இந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக். அதில் "டாக்டரைச் சந்திக்க 1ஆம் தேதி சென்னை,2ஆம் தேதி செங்கல்பட்டு,3ஆம்தேதி காஞ்சிபுரம்,4ஆம்தேதி விழுப்புரம்" இப்படியாக மாதம் முப்பது நாளும் ஒவ்வொரு ஊர் சொல்லப்பட்டது.





டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???