ஹையா! பெருமையாக்கீது!

இந்தக் காமெடியப் பாத்தீங்களா??




இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம் நாந்தானாம்.



ஓண்ணுமில்லை...ச்சும்மா :))

நெஞ்சில் கோடி நன்றிகள்!

வலைப்பக்கம் துவங்கிய புதிதில் எதாவது எழுத வேண்டுமே என்று எழுதத் துவங்கியதுதான் கவிதைகள். எப்பொழுதும் படிப்பவனாக மட்டுமே இருக்க விரும்பிய எனக்கு கொஞ்சம் எழுதவும் கற்றுத்தந்தது வலையுலகம்தான் என்பதை சற்று கர்வத்துடன்கூட சொல்வேன். வலையுலகம் வந்த புதிதில் நண்பர்களோடு பின்னூட்டக் கும்மி அடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருந்தது. அந்த நேரத்தில் ”யோவ்!நல்லாத்தான்யா எழுதுற.ஒழுங்கா தொடர்ந்து எழுதுயா” என்று சீரியசாக அண்ணன் தாமிரா(ஆதி) அட்வைஸ் செய்து என்னை தொடர்ந்து எரிச்சல் படுத்திக்கொண்டு இருந்ததை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கின்றேன். எப்பொழுதுதெல்லாம் ஒரு நல்ல இடுகை இடுகின்றேனோ அப்போழுதெல்லாம் பின்னூட்டம் இடுவதற்கு முன்பாக என்னை போனில் அழைத்து வஞ்சனையின்றிப் பாராட்டும் அண்ணன் நர்சிம், தொடர்ந்து என்னை நேரிலும்,தொலைபேசியிலும் ஊக்கப்படுத்தும் அக்கா புதுகைதென்றல், அண்ணன்கள் பரிசல்,முரளிகண்ணன்,கார்க்கி,கிரி,துக்ளக் மகேஷ்,வடகரையார்,கடையம் ஆனந்த்,கேபிளார்,செய்யது இன்னும் எண்ணற்ற சகோதர,சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிக்கடன்கள்.



”ஆமா எப்ப எதுக்கு இதெல்லாம்?” அப்படிங்குறீங்களா??


வேறென்ன....சும்மா கிடந்தவனை நீங்கள்லாம் கிளப்பிவுட்டதுல்ல இன்னைக்கு என்னோட கவிதை ஆனந்தவிகடன் பக்கம்.20ல் வந்துருக்கு.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! (பகுதி 2)




தான் என்னவாக வேண்டும்.அதற்கு எப்படித் திட்டமிட வேண்டும் என்பது அவரது இயல்பிலேயே இருக்கின்றது.அதற்கு உதாரணமாகத்தான் சென்ற தொடரில் அவரது சிறு வயது சம்பவங்களைக் குறிப்பிட்டேன். மற்றபடி அவரது வாழ்க்கை வரலாறு எழுதுவதோ அல்லது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதோ நோக்கம் அல்ல. அப்படிப்பட்ட திருநாவுக்கரசர் எங்கே சறுக்கினார் என்பதை அலசுவதே இந்தத் தொடரின் நோக்கம்.எனவே இனி அவரது அரசியலை மட்டும் பார்ப்போம்.



1977 ல் நடைபெற்றத் தேர்தலில் அறந்தாங்கித் தொகுதியில் வேட்பாளராகி முதன்முறையாக சட்டசபைக்கு உறுப்பினராக வெற்றிவாகை சூடும்போது அடுத்த கால் நூற்றாண்டுக்கு அவர் அறந்தாங்கித் தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினராக இருப்பார் என்று யாருமே கனவில்கூட நினைக்கவில்லை.இவ்வளவு ஏன் அவரேகூட அதை நினைத்திருப்பாரா என்பது சந்தேகமே! பின்னர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக மட்டும் அல்ல...கிட்டத்தட்ட புதுக்கோட்டை மாவட்டத்துக்கே மன்னராகவும் ஆகிப்போனார்.



அந்தத் தேர்தலில் மாற்றம் வேண்டிய தமிழக மக்கள் எம்.ஜி.ஆர் கட்சிக்கு பெருவாரியான இடங்களை அளித்ததே திருநாவுக்கரசரின் வெற்றிக்கும் காரணமானது.அந்த ஒரு தேர்தலில் மட்டுமே அறந்தாந்தாங்கி மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்து வாக்களித்தனர்.பின்னர் வந்த தேர்தல்களில் எம்.ஜி.ஆரோடு திருநாவுக்கரசரையும் பார்த்து வாக்களித்தனர் என்பதே உண்மை. அமைச்சரவை அமைத்த எம்.ஜி.ஆர் 27 வயதேயான திருநாவுக்கரசரை சட்டசபை துணை சபாநாயகர் ஆக்கினார். ஓரிரு மாதங்கள் அந்தப் பதவியில் இருந்தபின் அவரை எம்.ஜி.ஆர். அமைச்சராகவும் ஆக்கினார்.



பெரும்பாலான தமிழக மக்கள் அவர் தொகுதியை சொர்க்கம்போல் வைத்து இருந்து இருக்கின்றார்.அதனால்தான் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கின்றார் என நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஒரு கூட்டுறவு நூற்பாலை கொண்டு வந்தது (அதுவும் சில வருடங்களில் மூடப்பட்டு விட்டது), ஒரு பாலிடெக்னிக் கொண்டு வந்தது, இதுதவிர அவர் அரசுரீதியாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.





இதற்கு அவரையும் குறை சொல்ல முடியாது. காரணம் சில தொகுதிகளின் புவியியல் அமைப்பின்படி பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. உதாரணமாக திருச்சி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரங்கராசன் குமாரமங்கலம் திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குள் மூன்று மேம்பாலங்களைக் கொண்டுவந்து திருச்சி மக்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றார். அதே புதுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரால் புதுக்கோட்டை நகரில் உள்ள இரண்டு லெவல் கிராசிங்குகளுக்கு மேம்பாலம் கொண்டுவரமுடியாது.காரணம் அந்த அளவிற்கு டிராபிக் நெருக்கடியோ,காலதாமதமோ இல்லை. எனவே அரசின் சட்ட,திட்டம் அதற்கு அனுமதிக்காது. டி.ஆர்.பாலு தென் சென்னையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசிடம் ஐ.டி காரிடாருக்கான சலுகைகளைப் பெற்றார். அதே இராமநாதபுரத்து பாராளுமன்ற உறுப்பினர் அங்கு ஐ.டி காரிடார் அமைக்க இராமநாதபுரத்தின் புவியியல் அமைப்பு அனுமதிக்காது. அப்படி இருந்தும் எப்படி வந்து இந்த மக்கள் செல்வாக்கு??


(நாளை பார்ப்போம்)



டிஸ்கி : நண்பர்களே சென்ற இடுகை எனது 75 ஆவது இடுகை. என்னுடைய பழைய வலைப்பூ 75 வது இடுகையின் போதுதான் ஹேக் செய்யப்பட்டது. அதனால்தான் இந்த முறை 75 கடந்தவுடன் சொல்கின்றேன் :))

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!


புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கூப்பிட்டால் கடல் அருகில் வரும் ஆவுடையார்கோயில் ஓன்றியத்தில் ஒரு மூலையில் உள்ள கிராமம்.பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் பொடுசுகளோடு பொடுசகளாக வகுப்பில் இருக்கும் மாணவர்களில் அவன் மட்டும் தனித்துத் தெரிகின்றான். கிராமத்து மாணவர்களுக்கே உரிய இலட்சணக் குறைவு அவனுக்கு மட்டும் மிஸ்சிங்.



சற்றே எடுப்பான நிறத்தினால் மட்டுமல்ல, சராசரிக்கும் அதிகமான அறிவினால் ஆசிரியர்களின் அன்புக்கும் பாத்திரமாகின்றான். மூனாம்ப்பில் இருந்து நாலாம்ப்பிற்கு பாஸாசன அவனது மகிழ்ச்சி சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.படிப்பின் மதிப்பும்,உயர்வும் புரியாத அவனது கிராமத்து வெள்ளந்தித் தந்தை “படிச்சது போதும்.இனிமே நீ ஒழுங்கா நம்ம ஆடு,மாட்டை மேக்கிற வழியப்பாரு” என்கின்றார். தினமும் அவன் மாடு மேய்க்கச் செல்லும்போது 10 பைசா காசும் குடுக்கின்றார்.



அவன்தான் சராசரிக்கும் சற்று அதிகமான அறிவுள்ள மாணவனாச்சே! ஒரு யோசனை வருகின்றது. தன்னோடு மாடு மேய்க்க வரும் சக தோழனிடம் ஒரு டீலுக்கு வருகின்றான். அதாவது தன்னுடைய மாடுகளையும் சேர்த்து அந்தத் தோழன் மேய்க்க வேண்டியது. அதற்குக் கூலியாக இவன் தினமும் அப்பா தரும் 10 பைசாவை அவனிடம் குடுத்துவிட வேண்டியது. தோழன் டீல் ஓ.கே என்று சொல்ல இவன் சந்தோசமாக மாடுகளை அவனிடம் விட்டுவிட்டு அப்பாவிற்குத் தெரியாமல் பள்ளிக்குச் செல்லத் துவங்கினான்.



நல்லவேளை...அன்றெல்லாம் கிராமங்களில் பணம் பறிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லாததால் அப்பாவுக்குத் தெரியாமல் பைசா செலவின்றி பத்தாம் வகுப்புவரை அந்த கிராமத்துப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களோடு தேறுகின்றான். அங்குதான் ஆரமிக்கின்றது அவனது வாழ்க்கையில் முதல் சோதனை.காரணம் மேலே பி.யூ.சி.படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள நகரமான புதுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். தாய்மாமனிடன் சரண்டர் ஆகின்றான் அந்த மாணவன். அவர் அவனது அப்பாவிடம் விஷயத்தைச் சொல்ல அப்பாவும் மகிழ்வோடு அவன் மேலும் படிக்க அனுமதிக்கின்றார்.



புதுக்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் சட்டக் கல்லூரியில் பி.எல்., படிப்பில் சேர்ந்து அவன் வாழ்க்கை ஒரு கெளரவமான இடத்திற்கு வருகின்ற நேரம். இந்நிலையில் எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவைத் துவங்குகின்றார். சட்டக் கல்லூரி மாணவர் அ.தி.மு.க அமைப்பைத் துவங்கி அரசியலிலும் ஆர்வமாகின்றான் அந்த கிராமத்து மாணவன். விரைவில் வந்த தேர்தலில் அவன் கிராமம் இருக்கும் தொகுதிக்கு அவனை வேட்பாளராக அறிவிக்கின்றார் எம்.ஜி.ஆர்.



அந்த கிராமத்துச் சிறுவன் வேறு யாருமல்ல...எம்.ஜி.ஆர் அவர்களால் தனது ”இளைய நிலா” என்று அன்போடு அழைக்கப்பட்ட அன்றைய திருநாவுக்கரசு...இன்றைய திருநாவுக்கரசர்.



(மீதி வரும் திங்கள் மாலை...)

முன் காதல் சுருக்கம்

உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட

முடியவில்லை!





எதிர்ப்புகளைச் சுருட்டி

வெற்றிச் சரித்திரமானது

நம் காதல்!





நினைத்த பொழுது

பாயை விரிக்கும்

உரிமை பெற்ற நேரம்...



நம் காதல்

சுருட்டப்பட்டது!

தம்பியின் டைரிக் குறிப்புகள் (06/11/09)




அண்ணன் ஜீவன் அவர்கள் கள்ளுக்கடையின் அவசியம் பற்றி எழுதிய இந்த இடுகையை முதலில் படித்து விடுங்கள். இதில் டாஸ்மார்க் மதுவகைகளுக்கும், கள்ளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பீடு ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார். ஒருமனிதனாக டாஸ்மார்க் வகைகள் மற்றும் கள் என்ற எவற்றின் மீதும் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் ஒரு பொருளாதாரம் பயின்ற மாணவனாக என்னுடைய ஆதரவு கள்ளுக்கடைகளுக்கு உண்டு. காரணம் டாஸ்மார்க் வகைகளில் 90 சதவிகிதம் வெளிமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுபவை. நம்முடைய ”குடி” மக்களில் அத்தனை பணமும் இந்த விற்பனையின் வாயிலாக நம்முடைய மாநிலத்தை விட்டுவிட்டு வெளியில் சென்று விடுகின்றது. தங்கள் உழைப்பின் மூலம் அரும்பாடுபட்டு ஈட்டிய பணத்தில் வருடத்திற்கு சுமார் 5000கோடி ரூபாய் நம்மாநிலத்தை விட்டு வெளியில் சென்றால் தொடர்ச்சியான தொழில் முன்னேற்றம் என்பது வரும் காலங்களில் கானல்நீராகலாம். அதே நேரத்தில் கள் என்பது உள்ளூர் தயாரிப்பு. அந்தந்த ஊரில் உள்ள தென்னை மற்றும் பனைமரத்தோப்புகளில் தயாரிக்கப்பட்டு அதே ஊரிலேயே விற்றும் போய்விடும். தென்னந்தோப்பு முதலாளி என்ன செய்வார்?? உள்ளூர் தொழிலாளர்களை கள் இறக்குதல்,தோப்பைப் பராமரித்தல் போன்ற வேலைகளுக்கு உள்ளூர் நபரையே வேலையில் ஈடுபடுத்துவார். உள்ளூர் மக்களிடம் விற்பனை செய்து வரும் பணத்தில் ஒரு பகுதி உள்ளூர் மக்களிடமே இதுபோல் போய்ச்சேரும். கள்ளுக்கடைக்காரர் அவர் ஈட்டும் பணத்தை பெரும்பாலும் உள்ளூரில் அல்லது அந்த மாவட்டத்தில் பிறதொழிலிலோ,சொத்திலோ மறுமுதலீடு செய்வார். அதன் தொடர்ச்சியாக அமையும் வேலைவாய்ப்பும் உள்ளூர் மக்களைச் சென்றடையும்.பொதுவாக கள்ளுக்கடைகளை ஒட்டி சாக்னா கடைகள் அமைவதுண்டு. அங்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள் உள்ளூர்கடைகளில் வாங்கப்படும். மொத்தத்தில் பணப்புழக்கம் உள்ளூரில் அதிகரிக்கும்.



ஒரு இடத்தை நோக்கிக் குவியும் பொருளாதாரத்தைவிட பகிர்வுப் பொருளாதாரமே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. மொத்தத்தில் டாஸ்மார்க் என்பது வீக்கம்.கள்ளுக்கடை என்பது வளர்ச்சி. இன்னும் பல x and y எல்லாம் போட்டு விளக்கி உங்களைக் குழப்பமுடியும். முடிந்தவரை எளிமையாகவே சொல்லி இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி டாஸ்மார்க் மற்றும் கள்ளுக்கடை இரண்டுமே இருக்கக்கூடாது. அரசுக்கு முடியாத பட்சத்தில் கள்ளுக்கடையே என் சாய்ஸ்.




********************************************************




இரண்டு ,மூன்று தினங்களாக மழை வெளுத்து வாங்குது. நான் வேலையில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அன்று இருந்த அட்மின் டைரக்டர் திரு.அருண் ஷெராப் அவர்கள் இதுபோன்ற ஒரு அடைமழை காலத்தில் என்போன்று டூவீலரில் வரும் கடைநிலை ஊழியர்களுக்காக நிர்வாகத்திடம்பேசி நிறுவன செலவில் மழைக்கோட்டு பெற்றுத் தந்தார். இது நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும். கடந்த மூன்று வருடங்களாக நான் பதவி உயர்வில் காரில் செல்லும் ஊழியனாகிவிட்டேன். நேற்று மாலை நிர்வாகத்திடம் பேசி பைக்கில் வரும் ஊழியர்களுக்கு மழைக்கோட்டு பெற்றுத்தந்தேன். இதை நான் எனக்கு கார் வந்த ஆண்டே செய்து இருக்கலாம்.அல்லது சென்ற ஆண்டு மழைகாலத்தில் செய்து இருக்கலாம். இப்போதும் கூட மழை துவங்கி மூன்றுநாட்கள் கழித்துதான் இந்த யோசனை எனக்கு வந்திருக்கின்றது. கடந்து வந்த பாதையை மறக்காமல் எதார்த்தமாக இருக்க எவ்வளோ முயற்சி செய்கின்றேன்.இருப்பின் சில நேரங்களில் சராசரி மனிதனாகிவிடும் குற்ற உணர்ச்சி உறுத்துகின்றது.




********************************************************




இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் “கர்நாடகாவில் எடியூரப்பாவை எதிர்த்து பெண் மந்திரி போர்க்கொடி” என செய்தி வந்துள்ளது. ஏம்ப்பா மந்திரின்னா மந்திரிதானே?? அதில் ஆணென்ன,பெண்ணென்ன?? வேலையை வேலையாக மட்டுமே பார்க்கும் போக்கில்லாமல் பெண்பைலட்,பெண்போலிஸ் என குறிப்பிடுவது கிட்டத்தட்ட பெண்களை அவமதிப்பதுபோல்தான். இதே எடியூரப்பாவை எதிர்க்கும் மந்திரி ரெட்டியைப்பற்றிக் குறிப்பிடும் போது “ஆண் மந்திரி போர்க்கொடி” அப்படின்னா போடுறீங்க? ச்சே..வரவர ஆண்களுக்கு சம உரிமையே இல்லப்பா :))




********************************************************



படித்ததில் பிடித்த கவிதை



கடந்துபோதல்



பிறகு

எல்லாவற்றையும்கடந்து

வேடர்கள் நுழைய முடியாத

வனங்களில் திரியும்

பறவையானது காதல்.

முன்பு

அதன் பெயரில்

பேசிய எழுதிய புணர்ந்த

மயிர்கள் உதிர்த்து.


- இளம்பிறை




********************************************************



அறிஞரின் இந்த வாரத் தத்துவம்




கண்ணா, தண்ணி இல்லாம 40 நாள் வாழலாம், காற்று இல்லாம 8 நாள் வாழலாம்.பட் நம்பிக்கை இல்லாம ஒரு நொடிகூட வாழ முடியாது. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணுறதுல வைக்கிற நம்பிக்கையை எல்லாத்துலயும் வைய்யி. ச்சும்மா அடுச்சு தூள் கிளப்பலாம்.


unsung hero


1949 ஆம் வருடத்தின் எதோ ஒருநாள். சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்து கொண்ட அந்த இளைஞன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நுழைகின்றான். நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஒய்வு அறையின் ஒரு மூலையில் உள்ள தண்ணீர் பானையில் தண்ணீரை எடுத்து குடிக்கத் துவங்குகின்றான்.



“டேய்!நிறுத்து”

“என்ன சார்?”

“அந்த தண்ணிய குடிக்கக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”

”ஏன் சார்?”

“நீ புதுசா வந்துருக்குறியா?”

”ஆமாம் சார்”

“இது எங்கள மாதிரி உயர்சாதிக்காரர்கள் மட்டும் குடிப்பதற்காக உள்ள பானை. நீ புதுசுங்குறதால இந்தத் தடவை பரவாயில்லை.இனிமே இதுல தண்ணி எடுத்துக் குடிக்காதே..புரியுதா?”

கண்டிப்பான குரலில் சொல்ல்கின்றார் அந்த உயர்சாதி வக்கீல்.



அவரை உற்று நோக்கிய அந்த இளைஞன் சொல்கின்றான், ”இது பொது இடம்.உங்களுக்கெல்லாம் அப்படி அவசியம் எனில் நீங்கள் வீட்டில் இருந்து கூஜாவில் தண்ணீர் எடுத்து வாருங்கள்.இங்கு குடிக்காதே என்று சொல்ல உங்கள் யாருக்கும் உரிமை இல்லை ”



”என்னடா வாய் ரொம்ப நீளுது”

“தண்ணீர் குடிக்காதே என்று மட்டுமல்ல...என்னை “டா” போட்டு அழைக்கவும் உங்களுக்கு உரிமையில்லை”

“அப்படித்தாண்டா சொல்வேன்”



அவர் அப்படி சொன்ன அடுத்த வினாடி தண்ணீர் பானையை எடுத்து அவர் தலையில் போட்டு உடைத்து அந்த இளைஞன் சொன்னான் “ என்னை அந்த பானையின் தண்ணீர் எடுக்காதே என்று சொல்லும் எவனையும் இப்படித்தாண்டா செய்வேன்”



சக வக்கீலைத் தாக்கிய குற்றத்திற்காகவும், நீதி மன்றத்தின் உள்ளே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் 15 நாள் சிறை தண்டனையும், மூன்று மாதம் வழக்குகளில் வாதாடத்தடையும் விதிக்கப்படுகின்றது. அதுநாள்வரை இந்தப்பாகுபாட்டை ஏற்றுக்கொண்டிருந்த பிற வக்கீல்கள் உணர்வு பெற்றவர்களாய் பெரும் போராட்டத்தில் இறங்க அந்த இளம் வக்கீல் இரண்டே நாட்களில் விடுதலை ஆகின்றார்.





சிறையில் இருந்து விடுதலைபெற்ற பின்னர் கோர்ட் ஹாலின் உள்ளே செல்கின்றார். அன்றைய நாட்களில் நீதியரசரின் முன்னே இருபுறமும் இருக்கும் வக்கீல்கள் இருக்கையில் முதலில் உயர் வகுப்பினரும் பின்னர் வரிசைப்படி மற்ற சாதி வக்கீல்களும் அமர்ந்திருக்கும் முறை இருந்தது. இதுகண்ட அந்த இளம் வக்கீல் மறுநாள் வெகுசீக்கிரமாகவே வந்து முதல் இருக்கையில் அமர்ந்து விட்டார். உயர்சாதி வக்கீல்கள் அவர் அமர்ந்து இருப்பதைக் கண்டு பெரும் பிரச்சனையைக் கிளப்புகின்றனர். எதையும் கண்டு கொள்ளாது அந்த இருக்கையில் இருந்து எழ மறுத்து அசையாது அமர்ந்துவிட்டார் அவர்.



பிரச்சனை பெரிதாவதைக் கண்ட நீதிபதி அவரிடம் “தம்பி! நீ எங்கு அமர்ந்தால் என்ன? இருக்கையில் என்ன இருக்கின்றது? நீ பின்னால் போய் அமர்ந்தால்தான் என்ன?” என்று வினவுகின்றார்.



“மைலார்ட்! உங்கள் கருத்துப்படி இருக்கையில் ஒன்றுமில்லை...அப்படித்தானே?’

“ஆமாப்பா”

“அப்படியானால் நாளைமுதல் நான் உங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றேன்..நீங்களே சொல்லிவிட்டீர்களே”



என்ன சொல்வது என்று புரியாத நீதியரசர் இனிமேல் முதலில் வருபவர்கள் இருக்கை காலியாக இருக்கும் முறைப்படி அமர்ந்து கொள்ளுங்கள் என்று தீர்பளிக்கின்றார்.





அந்த இளம் வக்கீல் என்னுடைய மாமா புதுகை நகர மக்களால் அன்போடு பி.எஸ்.பி என்று அழைக்கப்படும் பி.எஸ்.பக்கீர் முகமது அவர்கள்.



குன்றக்குடி அடிகளார் அவர்களால் துவங்கப்பட்ட திருவருள் கழகம் அமைப்பின் தீவிர உறுப்பினர். தமிழகத்தில் எங்கெல்லாம் ஜாதி,மதக் கலவரங்கள் நடக்கின்றதோ அங்கெல்லாம் திருவருள் கழகத்தின் சார்பாகச் சென்று அமைதியை நிலைநாட்டுவதை தன்னுடைய வாழ்நாள் பணியாகக் கொண்டவர். 5 வேளை தவறாமல் தொழுகும் இஸ்லாமியராய் அனைத்து மதத்தவரையும் பாகுபாடின்றி நேசிப்பவர். புதுக்கோட்டை வக்கீல்கள் சங்கத்தின் தலைவராய் கால் நூற்றாண்டுக்கும்மேல் பணிபுரிந்தவர்.



சமூகநீதியையும்,மத நல்லிணக்கத்தையும் தனது இருகண்களாய் கொண்டு வாழ்ந்த அந்த கிழட்டுச் சிங்கம் தன்னுடைய 83 ஆம் வயதில். நேற்று உலகை வாழ்வை விடுத்து மறுவாழ்வு சென்றடைந்து விட்டது. இறைவனின் அவையில் அவர் நற்கூலிபெற பிராத்திக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றேன்.